Show all

கடவுள்- ஆண்பாலோ, பெண்பாலோ அல்ல; ஒன்றன்பால்!

22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். கடவுளுக்கான விளக்கத்தை தமிழில்தான் தேட வேண்டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளில்- 
1.மொழிக்கு இலக்கணம் உரிய மொழிகளும் உண்டு. 2.இலக்கணமே இல்லாத மொழிகளும் உண்டு. 
3.பேச்சு மொழியாக இல்லாத மொழிகளும் உண்டு. 
4.பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்கில் இல்லாத மொழிகளும் உண்டு.

ஆனால் தமிழுக்கு அனைத்தும் உண்டு. இந்த அனைத்துக்கும் மேலாக மொழிக்கு மட்டுமே இலக்கணம் என்றில்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டவர்கள் தமிழ் முன்னோர். 

எழுத்து, சொல், என்று மொழிக்கு இலக்கணமும் ‘பொருள்’ என்று வாழ்க்கைக்கு இலக்கணமும் வகுத்து வாழ்ந்தவர்கள் தமிழ் முன்னோர். தமிழர் சமூகமாக கூடி மொழிக்கும் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டதால் தமிழர்களுக்கு மற்ற மற்ற மொழியினர் போல தனி மனிதர்களால் முன்னெடுக்கப்பட்ட மதம் தேவைப்படவில்லை. 

‘பொருள்’ அகம் புறம் என இரண்டு ஆகும். புறம் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். 

அகம் என்பதில் தலைவன், தலைவி, குடும்பம் இவர்களின் ஒழுக்கம் குறித்து ஐந்திணைகள். அந்த ஐந்திணைகள் ஒவ்வொன்றிற்கும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்று ஏராளமான விளங்கள் கொண்டிருக்கிறது தமிழர்தம் பொருள் இலக்கணம்.

கருப்பொருள் இலக்கணத்தில் வருகிற பொருள் பொதிந்த தமிழ்ச் சொற்களான கடவுள், இறை, தெய்வம் மூன்றும் தமிழுக்கு மட்டுமே உரிய சொற்கள். அவைகளுக்கான விளக்கத்தை தமிழில் மட்டுமே தேடவேண்டும். மாறாக தமிழர்கள் சிலரின் சார்புகளால் புழக்கத்திற்கு வந்துவிட்டன உலக மதங்கள் என்பதால் அந்த மத அடிப்படையில் இந்த சொற்களும் தவறுதலாகப் புழங்கப் படுகின்றன என்பதால் இந்த மூன்று சொற்களை மதங்களுக்கு காவு கொடுத்துவிடக் கூடாது.

மற்ற மற்ற மதங்கள் சுட்டுகிற அவர்களின் தெய்வங்களை- இறை என்றோ கடவுள் என்றோ பொருத்த முடியாது. இறை என்ற தலைப்பிலும், கடவுள் என்ற தலைப்பிலும் தமிழ் முன்னோர் சுட்டுகிற செய்தி முற்றிலும் வேறானது. மற்ற மற்ற மதங்கள் சுட்டுகிற அவர்களின் தெய்வங்கள் குறித்து அந்தந்த மதங்கள் சொல்லுகிற செய்தி வேறானது. 

இந்தக் கட்டுரையில் கடவுள் குறித்தே விளக்க முயல்வதால் தெய்வம் குறித்தும், இறை குறித்தும் இந்தக் கட்டுரையில் விளக்கப் போவதில்லை.

கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பது என்றே பொருள். கடவுள் ஆண்பாலோ பெண்பாலோ அல்ல. எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளியின் மூன்று நிலைகளையே கடவுள் என்கிறது தமிழ். 

அந்த மூன்று நிலைகள்: 1.தான் தோன்றி இயக்கம் இல்லாத, எல்லையில்லாத, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று எல்லாவற்றுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற வெளி. 2.அந்த வெளியில் குறிப்பிட்ட எண்ணிக்கை உடைய, தான்தோன்றி இயக்கம் உடைய, நிலம் நீர் தீ காற்று நீங்கள் நான் என்று எல்லோராலும் இயக்கம் பெற்ற இரண்டாவது நிலை விண்வெளி. 3.தனக்கு இயக்கம் வழங்கிய அனைத்தையும் இயக்க எதிரியக்க முனைப்பான விசும்பு என்பனவாகும். விசும்புதல் என்றால் குழந்தைகள் அழும்போது அடக்க முடியாமல் எழுகிற அந்த விசும்புதலைக் கொண்டதுதான் விசும்பு. 

நியூட்டனின் மூன்றாவது விதி நிகழக் காரணம் இந்த விசும்புதான். எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை என்பதுதானே அந்த விதி. அந்த விதியை முன்னெடுப்பதுதான் இந்த விசும்பு. ஆகவே கடவுள் என்பதை வேறு எவற்றோடும் பொருத்த முடியாது. 

கடவுள் என்பது கணினியில் உள்ள வண்தட்டு போன்றது. அது இல்லாத ஒன்றாக, எல்லை இல்லாத ஒன்றாக இருந்து, தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்று ஆகிய நாற்திரங்களால் இயக்கம் பெற்று அவைகளை இயக்கிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம் என்று தமிழ் முன்னோர் முன்னெடுத்தனர். அந்த மந்திரம் குறித்து எழுதுவது தனிக் கட்டுரைக்கான தலைப்பாகும்.

ஐந்து அகவை வரையிலுமான குழந்தைகள், இந்த மந்திர ஆற்றல் மூலமாகத்தான் தன் ஐந்து அகவைக்குள் தன் தாய்மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்கிறது. தன் தாய்மொழியை தான் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதான மென்பொருளை வடிவமைத்து அதை தனக்கான தலையெழுத்தாக விசும்பில் எழுதிவிட்டு சாதிக்கிறது. 

ஆனால் ஐந்து அகவைக்கு முன்பாகவே, குழந்தைகளின் விருப்பம் இல்லாமலேயே, பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை அந்தக் குழந்தையின் மீதாக திணிக்கும் முகமாக மழலையர்ப் பள்ளிகளில் அந்தக் குழந்தைகளைக் கையளிக்கின்றார்கள். நீங்கள் உங்கள் தலையெழுத்தை யாரோ எழுதுவதாக நம்புவதைப் போல அந்தக்குழந்தையும் தன்னுடைய தலையெழுத்தை பெற்றோர், ஆசிரியர், சுற்றம், நட்பு, உங்களால் அடையாளம் காட்டப்படுகிற தெய்வம் என்று யார்யாரோ தம்முடைய தலையெழுத்தை எழுதுகின்றனர் என்ற முடிவுக்கு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து, எதிர்பார்ப்புகளை நிறைத்துக் கொண்டு, வாழ்க்கையைத் தொலைத்து விட்டு பிழைப்பு நடத்தத் தொடங்கி விடுகிறது. 

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்கிற தமிழர் மந்திரச் செய்தியை மறந்து விட்டு, தனக்கான நன்மையைப்  பிறர் தரவில்லையே என்றும், மற்றவர்கள் தீமையையே தருகிறார்கள் என்றும் புலம்பி அந்தப் புலம்பலையே தன்னுடைய தலையெழுத்தாக வடிவமைக்கத் தொடங்கி அதையே திரும்பப் பெறுகின்றன. 

இதை மாற்றியமைத்து நமது குழந்தைகளின் தலையெழுத்தை அவர்களே எழுதிக் கொள்ளும் முகமாகவே நம்மை முன்னெடுக்க, தமிழ் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற மந்திரம் குறித்து நாம் அறிந்து கொள்ள முயன்றால் அது தனித் தலைப்பாகும். 

ஆக கடவுள் என்பது ஆண்பாலோ பெண்பாலே அல்ல. கடவுள் நம்மை படைத்தான ஒன்றும் அல்ல. கடவுள் வெளி, விண்வெளி, விசும்பு என்ற மூன்று நிலைகளைக் கொண்டது. நம்பிக்கைக்கு உரியதல்ல கடவுள். அறிந்து பயன்படுத்திக் கொள்வதற்கானது கடவுள். கடவுள் எல்லை இல்லாதது. கடவுள் தான்தோன்றி இயக்கம் உடையது அல்ல. கடவுள் நம்மிலிருந்து இயக்கம் பெற்று நம்மை இயக்குகிறது. 

முதல் எனப்படுவது இடமும் காலமும் என்று தமிழர் அடையாளப் படுத்துவதில் இடம் என்பது கடவுள். நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திர ஆற்றல்கள் தான்தோன்றி இயக்கதால் காலம் காட்டுகின்றன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.