Show all

ஆன்மா- வேறுஉடல் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது?

ஒரு உயிரி இறந்து விட்டால் ஆன்மா வேறுஉடல் பெற்றுவிடுவதாகவும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்றும் சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

17,தை,தமிழ்த்தொடராண்டு-5124: உயிர் என்ற தமிழ்ச்சொல்லை ஆன்மா என்று சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு அதன் விளக்கத்தை தங்கள் சமஸ்கிருதமரபு அடிப்படையில்- ஒரு உயிரி இறந்து விட்டால் ஆன்மா வேறுஉடல் பெற்றுவிடுவதாகவும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்றும் பார்ப்பனியம் தெரிவித்து வருகிறது. 

தமிழர் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுகிற செய்தி வேறானது ஆகும். அதை விரிவாக: http://www.news.mowval.in/Editorial/katturai/Meaning-366.html இந்த இணைப்பில் சென்று படித்தறியலாம். தமிழர் அடிப்படையில் உயிரிகளின் இறத்தல் காலமாதலைப் புரிந்து கொண்டால், முன்னோர் வழிபாட்டில் எப்படி பலன் கிடைக்கிறது என்பதைப் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும்.

பார்ப்பனிய அடிப்படையில்- ஒரு உயிரி இறந்து விட்டால் ஆன்மா வேறுஉடல் பெற்றுவிடுவதாகவும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்றும் உள்வாங்கிக் கொண்டால் முன்னோர் வழிபாட்டிற்கு பொருள் இல்லை என்பது நூறு விழுக்காடு உண்மைதான். அந்த வகையில் உங்களுக்கு எழுந்த வினா நூறு விழுக்காடு அறிவூட்டம் மிக்கது என்று பாராட்டத்தக்கதே.

தமிழ் ஆண்டுக் கணக்கு- ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆரியர் ஆண்டுக் கணக்கு- நிலாவை அடிப்படையாகக் கொண்டது. உலகினர் தொடக்கத்தில் ஆரியர் ஆண்டுக் கணக்கிலும் தற்போது தமிழர் ஆண்டுக் கணக்கிலும் இருந்து வருகின்றனர். 

உலகினர் தமிழர் ஆண்டுக்கணக்கிற்கு மாறும் போது பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதில் ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

நிலா ஆண்டுக்கணக்கில்- தொடக்கத்தில் ஆண்டுக்கு இருந்தது பத்து மாதங்கள் மட்;டுமே. தசம் என்றால் பத்து, பாத்தாவது மாதம் தசம்பர். நவம் என்றால் ஒன்பது, ஒன்பதாவது மாதம் நவம்பர். ஆக்டா என்றால் எட்டு, எட்டாவது மாதம் அக்டோபர். ஹெப்டா என்றால் ஏழு, ஏழாவது மாதம் செப்டம்பர். தமிழர் ஆண்டுக் கணக்கை உள்வாங்கிய உலகினர்- தங்கள் மாதங்களில் எந்தப் பெயர் மாற்றமும் முன்னெடுக்காமல், கூடுதலாக்கப்பட வேண்டிய இரண்டு மாதங்களை இடையில் சொருகிக் கொண்டனர். அவை சூலையும் ஆகஸ்டும். சூலை மாதம் சூலியஸ் சீசராலும் அகஸ்ட் மாதம் அகஸ்டஸ் சீசராலும் சொருகப்பட்டது.

தமிழர்- குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐவகை நிலங்களிலும் நிலைத்து வாழ்ந்த காரணம் பற்றி ஞாயிற்றின் அடிப்படையை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் ஞாயிற்றின் அடிப்படையில் ஆண்டுக்கணக்கை நிறுவிக் கொண்டனர்.

ஆரியர்- ஆற்றங்கரை தேடி அலைந்ததால் அவர்களுக்கு பருவகாலம் அதற்கு அடிப்படையான ஞாயிறு என்கிற புரிதலுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. அதானால் அவர்கள் எளிய புரிதலாக நிலா வளர்தலையும், தேய்தலையும் அடிப்படையாக கொண்டு திதிகளை அமைத்துக் கொண்டனர். 

முன்னோர் வழிபாட்டில் திதியை முன்னெடுப்பது ஆரியர் மரபு ஆகும். ஆரியர்கள் அனைத்து விழாக்களும் திதி அடிப்படையிலேயே அமையும். எடுத்துக்காட்டு: அமாவசைத் திதியில் தீபாவளி, கோகுலாஷ்டமி என கண்ணன் பிறப்பு அஷ்டமி திதியில், ராமநவமி என ராமன் பிறப்பு நவமித் திதியில், விநாயகர் சதுர்த்தி என்று விநாயகர் பிறப்பு சதுர்த்தி திதியில் என்று தொடரும்.

முன்னோர் நினைவை- அவர்கள் இறந்த நாளில் அல்லது விழாக்காலங்களில் ஒரு நாளையோ, ஒரு நேரத்தையோ முன்னோர் நினைவுக்கு ஒதுக்குவது தமிழர் மரபு ஆகும். 

திருமண விழாக்களில் வீட்டுத்தெய்வ வழிபாடு என்ற தலைப்பில் முன்னோர்களை வணங்குவார்கள். பொங்கல் விழாவின் போது மாட்டுப்பொங்கல் அன்று இறந்தவர்களுக்குப் படையல் இட்டு வணங்குவார்கள். ஆடிப்பெருக்கின் போது ஆற்று மணலில் முன்னோர்களுக்கு பிள்ளையார் பிடித்து வணங்குவார்கள். வழிபாட்டு உருவமாக மஞ்சளிலோ, மண்ணிலோ, முட்டை வடிவத்தில் பிடிக்கப்படுவதை தமிழ்முன்னோர் பிள்ளையார் என்ற பெயரில் பேசினர்.

ஆன்மா- வேறுஉடல் பெற்றுவிடுவதாக சொல்லப்படுகிற- ஆரியர் ஆன்மா செய்தி அடிப்படையில்- முன்னோரை வணங்க முடியாது என்பது நூறு விழுக்காடு உண்மை.

ஆரியர்- முன்னோர் வழிபாட்டிற்கு தங்கள் சமஸ்கிருத அடிப்படையை விடுத்து, தமிழ் அடிப்படையை எடுத்துக் கொள்கின்றனர் என்பதைத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? 

தங்கள் சமஸ்கிருத அடிப்படையை விடுத்து, தமிழ் அடிப்படையில் முன்னோர் வழிபாட்டை எடுத்தபோதும், முன்னோர் வழிபாட்டைத் தங்கள் ஆண்டுக்கணக்கு அடிப்படையான திதியில் கொண்டாடி எல்லாம் தங்களுடையது என்பது போன்ற மாயையை உருவாக்கித் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழராகிய நாம்- வழக்கம் போல, முன்னோர் நினைவை, முன்னோர் இறந்த நாளில் அல்லது விழாக்காலங்களில் ஒரு நாளை அல்லது ஒரு நேரத்தை முன்னோர் நினைவுக்கு ஒதுக்கிக் கொண்டாடுவதையே தொடர்வோமாக. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,510.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.