போக்குவரத்து நெரிசலான பகுதி, குறுக்கிடும் நீர்நிலை எல்லா தடைகளையும் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பிரத்தியேக கட்டுமான அமைப்புடன் ஒரு மிதிவண்டித் தடத்தை உருவாக்கியுள்ளது “பைசைக்கிள் ஆர்கிடெக்சர் பையென்லே” எனும் அமைப்பு, பெல்ஜியத்தில். 10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெல்ஜியத்தின் லிம்பெர்க் நகரில் உலகின் சிறந்த மிதிவண்டித் தடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. லீ பெல்மேன் என்பவர் தலைமையிலான “பைசைக்கிள் ஆர்கிடெக்சர் பையென்லே” எனும் அமைப்பு, தங்கள் வடிவமைப்பு மிதிவண்டித் தடத்தில் மிதிவண்டிப் பயணம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த மிதிவண்டித் தடம் ஒரு குளத்தின் ஊடே 200 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பாதையாக பயணிக்கிறது. அதேபோல நெரிசல் மிக்க சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் சிறிய வகை நெகிழிப் பாலமாக வாகனங்கள் செல்லும் காங்கிரீட் பாலத்தின் கிழே புகுந்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெளியேறும் வகையில் சிறந்த கட்டமைப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது. நெருக்கடியான இடங்களில் மிதிவண்டி நிறுத்தம் எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டான கட்டமைப்பாகவும் இது கருதப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல், நெரிசல் மிக்க நகரத்திற்கு ஏற்ற வகையிலான மிதிவண்டிப் பயன்பாட்டின் தேவையை உலகிற்கு உணர்த்துகிறது பெல்ஜியத்தின் இந்த மிதிவண்டித் தடம். வெல்லட்டும் பெல்ஜியத்தின் முயற்சி! பரவட்டும் உலகம் முழுவதுமாக. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,194.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



