Show all

தமிழ்த்தாய் நடிகர் சங்கமா? நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது பெரும்பாலானோர் கோரிக்கை.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நடிகர்களுக்காக உருவாக்கப்பட்டதால் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது தனித் தனியாக சங்கங்கள் செயல்படுவதால், சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற  கோரிக்கை வலுத்து வருகிறது.

10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு இழுபறிகளுக்கிடையில் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. மொத்தம் 1,579 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர், நடிகைகள் முதன்மை கோரிக்கையாக நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றத்தை முன்வைத்தனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நடிகர்களுக்காக உருவாக்கப்பட்டதால் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது தனித் தனியாக மாநில சங்கங்கள் உருவாகி விட்டன. நம்முடைய தமிழக நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கங்களின் தாய் அமைப்பாகவும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. அப்படியிருக்கும் போது, சங்கத்தின் பெயரில் தென்னிந்தியா எதற்கு? தமிழக நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டியது தானே என்பது பலரின் வாதம். ஆகவே பெயரை மாற்ற வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்தக் கோரிக்கை கடந்த தேர்தலின்போதே எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 
தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஜயகுமார், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ‘தமிழ்த் தாய் நடிகர் சங்கம்’ என பெயர் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இதனை அவர்கள் செயற்குழுவில் பேசி முடிவு எடுக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். 
 
நடிகர் விவேக், ‘தமிழ்த் தாய் நடிகர் சங்கம்’ என வைத்தால் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்திருக்கிறார். பெரும்பாண்மையானோர் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம். என்றார் கமல். 

நடிகர் சங்கத்திற்கு பெயர்மாற்றம் உறுதி என்ற நிலையில், தமிழ்த் தாய் நடிகர் சங்கமா?  தமிழக நடிகர் சங்கமா? ஏன்ன பெயரில் மாறவேண்டும் என்பது பெரும்பான்மை அடிப்படையில் முடிவாகும். ஆனாலும் விசால் அணியினரே மீண்டும் வென்றால் பெயர் மாற்றம் முன்னெடுக்கப்படாது என்று கருதப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,194.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.