தேர்தல் அறிவிக்கப் பட்டதிலிருந்து, நடப்பு மோடி அரசு, காபந்து அரசுதான் என்கிற நிலையில்: முதன்மை அறிவிப்பு வெளியிடவிருக்கிறேன் என்று மக்களை அச்சுறுத்துவதும், விஞ்ஞானிகளின் சாதனைகளை பொது வெளியில் அறிவிப்பதும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்காத நிலையில், எதிர்கட்சிகளும், மக்களும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்பது குறித்து, திக்.திக்.திக் என அச்சத்தில் இருக்கின்றனர். 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து தற்போது காபந்து பொறுப்பேற்றிருக்கும் மோடி அரசுக்கு திட்டங்களை அறிவிப்பதற்கும், சாதனை நிகழ்த்துவதற்கும் அதிகாரம் கிடையாது. இந்தியா வடகொரியாவும் கிடையாது மோடி- கிம் ஜிம் உன்னும் கிடையாது என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் குடிஆட்சிதான் தொடரவிருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் காபந்து மோடி அரசின் கட்டுப்பாட்டில் இல்லை யென்பதையும் தேர்தல் ஆணையம் உறுதிப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகளையும் காபந்து தலைமைஅமைச்சராக இருக்கும் மோடியே அறிவிப்பாரோ என காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளது மக்கள் நடுவே மேலும் பீதியை கிளப்புவதாக இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் நாட்டு மக்களுக்கு நேற்று காலை 11.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மிக முதன்மையான தகவலை அளிக்க உள்ளதாக காபந்து அரசின் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தனது கீச்சுப் பக்கத்தில் கூறியிருந்தார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது- மோடி முதல்முறையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்று மிக ஆபத்தான நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அறிவிக்கப்போறாரோ என்று நாடு முழுவதும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. பாமர மக்களில் சிலர்: 'நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த வினாடியில் இருந்து நான் இந்தியாவின் அதிபராக சர்வாதிகாரியாக பொறுப்பேற்கிறேன்' என்று கூட மோடி சொல்லக்கூடுமோ என்ற அச்சத்தை வெளியிட்டனர். இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்பதுல்லா தனது கீச்சுப் பக்க பதிவில், 'ஒரு வேளை மக்களவைத் தேர்தல் முடிவுகளை மோடி அறிவிப்பாரோ' என பதிவிட்டுள்ளதோடு, மற்றொரு பதிவில், மோடியின் அந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்குட்பட்டு இருக்குமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இதனிடையே, 12.25 மணியளவில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், விண்வெளித்துறையில் இந்தியா இன்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகவும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது நாடு என்கிற பெருமையை பெற்று விண்வெளித்துறையில் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக மோடி குறிப்பிட்டார். அதன்படி விண்வெளியின் தாழ் நீள்வட்ட பாதையில் செயல்பாட்டில் இருந்த செயற்கை கோளை ஏசாட் எனும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியா வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக மோடி குறிப்பிட்டார். மிசன் சக்தி என்ற பெயரிலான இந்த தாக்குதலை இந்தியா மூன்றே நிமிடங்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதன் மூலம் விண்வெளித்துறையில் அதீத ஆற்றல் எனும் தகுதி இந்தியாவிற்கு கிடைத்துவிட்டதாகவும், விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் வல்லமை தற்போது இந்தியாவிடம் உள்ளதாக தனது உரையில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார் மோடி. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில் நாட்டு மக்களுக்கு முதன்மை உரையாற்ற போவதாக காபந்து தலைமைஅமைச்சர் மோடி அறிவித்திருந்ததும், நாட்டின் வான் வல்லமையின் வெற்றி குறித்து அறிவித்ததும் எதிர்க்கட்சியினரிடையே எதிர்ப்பை எழுப்பியுள்ளது. இந்த அளவிற்கு காபந்து தலைமைஅமைச்சருக்கு வல்லமை இருக்குமென்றால் இதை கண்டிப்பதற்கும், கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்காதென்றால் தேர்தல் நியாயமானதாக நடந்தது என்பதை தேர்தல் முடிவுகளில்தாம் தெரிந்து கொள்ள முடியும் என்று மக்கள் தம் சோகத்தை வெளிப்படுத்துகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,105.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.