இதையெல்லாம் செய்து விடாதீர்கள்! உரிமையோடு கேட்கிறேன் தயவுகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் தினகரன் கட்சியினருக்கு அன்பான வேண்டுகோள் ; அறிக்கையாக. 14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் கருத்துப்பரப்புதலின் போது பொன்னாடை, பூங்கொத்து பட்டாசு வெடிப்பது, பிளாஸ்டிக் தோரணங்கள் என எதுவும் வேண்டாம் என அமமுகவினருக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தத் தொல்லையும் ஏற்படக்கூடாது, என்றும் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்: தேர்தல் களத்தில் துரோகிகளும் எதிரிகளும் கொடுக்கும் தொல்லைகள் எல்லாம் தூள்தூளாக்கி வெற்றியைக் குவிக்கும் வகையில் நீங்கள் ஆற்றி வரும் பணிகள் நமது இயக்கத்திற்கு புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றன. நாம் மக்களோடு நிற்கிறோம், மக்கள் நம்மோடு நிற்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்கான பொன்னான வாய்ப்பு இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் முழுவதுமாக புரிந்து வைத்திருப்பீர்கள். கருத்துப்பரப்புதலில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மிகக்குறைந்த கால அளவே உள்ளது. இப்போது நமக்கு ஒவ்வொரு மணித்துளிகளும் பொன்னானது. நொடிப்பொழுதைக் கூட வீணடிக்காமல் தேர்தல் களத்தில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் இது. அதற்காக உங்களின் அன்பான முகங்களை தரிசிப்பதற்காகவும், மக்களை சந்தித்து நம்முடைய வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவும் மீண்டும் ஒருமுறை புறப்பட்டு இருக்கிறேன். இந்தக் கருத்துப்பரப்புதல் பயணத்தின் போது பட்டாசு வெடிப்பதில், பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுப்பதில், புகைப்படம் எடுப்பதில் பொன்னைவிட மேலான நம்முடைய நேரத்தை நாம் விரயமாக்கக்கூடாது. தங்களுடைய ஆத்மார்த்தமான அன்பையும், நம் இயக்கத்தின் மீதும், என் மீதும் கொண்டிருக்கும் அளப்பரிய அன்பையும் நன்கு அறிவேன். தேர்தல் கருத்துப்பரப்புதல் பயணத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் தோரணக் கொடிகளை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இதைப்போலவே நூற்றுக்கணக்கான வாகனங்களில் என்னை பின்தொடர்ந்து வரும் தங்களின் ஆர்வம் புரிகிறது. ஆனால் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாதல்லவா? அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் எந்த தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம் பட்டாசுகள், வாகனங்கள் போன்றவற்றை நம்முடைய வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்த்துவிடுவார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்களின் ஆசை முகங்களும், அதில் குடியிருக்கும் தூய அப்பகுக்கில்லாத வாழ்த்துக்களும் மட்டுமே போதும். நம் கவனத்தை சிதறவிட்டு எதிரிகளும், துரோகிகளுக்கும் இமியளவு கூட இடம் கொடுத்து விடக்கூடாது. நமது பலத்தை நிரூபிக்க வேண்டியது தேர்தல் களத்தில் என்பதை மறந்துவிடாதீர்கள். 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவதில் நம் கவனம் இருக்க வேண்டும். வல்லூறுகளைப்போல் நம்மை வீழ்த்த துடிக்கும் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் நடுவில் நம்முடைய ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு பொன். உள்ளன்போடு, உரிமையோடும் விடுக்கும் இந்த வேண்டுகோளை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன், இவ்வாறு தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,105.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.