சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக பட்டமளிப்பு விழாவில், இந்திய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்ற போது, சொதப்பியது சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக நிர்வாகம். 14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்மொழியின் சிறப்புகளைப் பட்டியல் இடுவது, தமிழின் தொன்மையைக் கொண்டாடுவது ஆகியன தமிழர்களைக் கவர சிறந்த வழி என்று திட்டமிட்டு அண்மைக்காலமாக அமெரிக்காவில் தொடங்கி சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வரை, தமிழ்மொழியின் சிறப்புகளை, தமிழின் தொன்மையைக் கொண்டாடி வருகிறது பாஜக. அதுவும் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை வைத்தே! சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக பட்டமளிப்பு விழாவில், இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்ற போது சொதப்பியது சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக நிர்வாகம். மோடியின் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒளிபரப்பிய ஒரு கடவுள் வாழ்த்துதான் இப்போது அதிக கவனம் ஈர்த்துள்ளது. சமஸ்கிருத பாடலுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. ஆங்கிலத்திலும் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல சொல்ல, மாணவ, மாணவிகளும் சமஸ்கிருத ஸ்லோகத்தை திருப்பி சொல்லியுள்ளனர். சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவதற்கு, சென்னை வந்திறங்கிய நரேந்திர மோடி, விமான நிலையத்திலேயே பாஜக தொண்டர்கள் நடுவே உரையாற்றினார். அப்போது, அவர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று தெரிவித்தேன். அங்குள்ள ஊடகங்களில் அது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது, என்று தெரிவித்தார். இதுமட்டுமா? தமிழர்களின் விருந்தோம்பல் மிகவும் சிறப்பானது. அவர்களின் இட்லி, தோசை, வடை போன்ற உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று மோடி தெரிவித்திருந்தார். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தொடர்ந்து தமிழை உயர்த்திப் பிடிக்கக் கூடிய மோடி, பங்கேற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத பாடல் ஒலித்தது சரியா? என்ற ஆதங்கம் மோடி ஆதரவாளர்களுக்கு எழுந்துள்ளது. மோடியே சொன்னதைப் போல, அமெரிக்க ஊடகங்கள், மோடியின் தமிழ்ப்பற்றை பார்த்து பூரித்துப் போய் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம், அதுவும் பாஜக ஆளும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கல்வி நிறுவனம், மோடியின் இந்தத் தமிழ் மொழி பற்று குறித்து, கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் தொடர்பே இல்லாமல் சமஸ்கிருதத்தில் மாணவர்களைப் பாட வைத்தது சரியா என்று கேட்கின்றனர் சில பாஜகவினர். அமெரிக்கா மட்டுமின்றி, அப்போது கொஞ்ச நேரம் முன்புதான் விமான நிலையத்தில் கூட தமிழ் பற்றி அவ்வளவு பெருமையாக பேசி இருந்தார் மோடி. அதற்குப் பிறகாவது சுதாரித்துக்கொண்டு தமிழ்மொழியில் வாழ்த்துப் பாடலை, சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? இது மோடி நிலைப்பாட்டிற்கு எதிரானது போல அல்லவா மாறி விட்டது? என்று அவரது ஆதரவாளர்கள் அங்கலாய்க்கிறார்கள். சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக நிருவாகத்தினரின் இந்த செயல் மோடிக்கு மரியாதை தருவதாக அமையவில்லை. தமிழை உயர்த்தி பேசி வரும் மோடி, சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சமஸ்கிருத மொழியில் பாடியதை கண்டிப்பாக ரசித்திருக்க வாய்ப்பு இல்லை. பாஜகவினரின் தமிழர் ஈர்ப்பு நடவடிக்;கைக்கு எதிராகச் செயல்பட்டு பாஜகவினரை அறநெருக்கடியில் ஆழ்த்தி, கொடுமை செய்து விட்டது சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக நிருவாகம். ஒன்றிய அரசில் ஆளும் பொறுப்பேற்றுள்ள பாஜகவின் தற்போதைய நிலைபாடு குறித்து புரிந்து கொள்ள இயலாத நிலையில் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் தகவல் தொழில் நுட்பத்தில் சுணங்கி இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,292.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



