கடந்த கல்வி ஆண்டுக்கான இந்திய அளவிலான பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம். இந்தியாவை மாற்றுவதற்கான இந்திய நிறுவன ஆணையம் (NITI Commission) அறிக்கை வெளியிட்டுள்ளது. 14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த கல்வி ஆண்டுக்கான இந்திய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இந்திய மாநிலங்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்து இந்தியாவை மாற்றுவதற்கான இந்திய நிறுவன ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் வசதிகள், ஆசிரியர் - மாணவர் விகிதம் உள்ளிட்ட 44 காரணிகளை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசை பட்டியலில், 73.4 விழுக்காடு மதிப்பெண் பெற்ற தமிழகத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த முறை தமிழகம் 63.2 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தது. 76.6 மதிப்பெண் பெற்ற கேரளா முதலிடம் பிடித்துள்ளது. 36.4 மதிப்பெண் பெற்றுள்ள உத்தரப் பிரதேசம் கடைசி இடம் பிடித்துள்ளது. அதற்கு முந்தைய இடங்களை பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் பிடித்துள்ளன. 3வது இடத்திலிருந்த மஹாராஷ்டிரா தற்போது 6வது இடத்திற்கும், 5வது இடத்திலிருந்த கர்நாடகா 13வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. ஆந்திரா 11வது இடத்திலும், காஷ்மீர் 16வது இடத்திலும் உள்ளன. மதிப்பீடு செய்ய மறுப்பு தெரிவித்த மேற்கு வங்க மாநிலம் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,292.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



