Show all

கோயில்கள், மிருககாட்சி சாலைகளில் கட்டி வைக்கப்படும் யானைகள், குறுகிய காலத்தில் இறக்கின்றன.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன், உயர;நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆசியாவில் யானைகள் சராசரியாக 65 முதல் 70 வயது வரை வாழ்கின்றன. இயற்கை சூழலில் வனத்தில் உள்ள யானைகள் அதிக நாள்கள் வாழ்கின்றன.  கோயில்கள், மிருககாட்சி சாலைகளில் கட்டி வைக்கப்படும் யானைகள், குறுகிய காலத்தில் இறக்கின்றன. இதனால் ஆசியாவில் யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் யானைகளை வணிகரீதியாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. யானைகளைத் துன்புறுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் யானைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன.

பொதுவாக யானைகள் அதன் குட்டிகளுக்கு பத்து வயது வரை பால் கொடுக்கும். யானைகளை குட்டிகளில் இருந்து பிரித்து கோயில்களுக்கு கொண்டு செல்கின்றனர். பின்னர் பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். கோயில் திருவிழாக்களில் யானைகளின் முதுகில் அதிகபாரம் ஏற்றுவது, பல மணிநேரம் வெயிலில் நிறுத்தி வைப்பது, உணவு கொடுக்காமல் விடுவது என துன்புறுத்துகின்றனர். இதனால் சில நேரங்களில் யானைகள் மிரண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. யுhனைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

எனவே, கோயில்கள், வீடுகளில் வளர்க்கப்படும் யானைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும், கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க புதிதாக உரிமம் வழங்கக்கூடாது, கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதிக்கவும், அவ்வாறு வளர்க்கப்படும் யானைகளை மீட்டு முதுமலை அல்லது மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். மனுவுக்கு அக்.6க்குள் பதிளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.