Show all

பரந்தூர் புதிய விமான நிலையம் வேண்டாம்! 67வது நாளாக விடிய விடிய போராடிவரும் மக்கள்

67வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் பள்ளி சிறுவ, சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என தங்களது குடும்பத்தாருடன் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர் மற்றும் பதின்மூன்று கிராமங்களில் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அறுபத்தி ஏழாவது நாளாக நேற்று இரவும் பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

சென்னையின் புதிய இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

இதில் ஏகனாபுரம் கிராமத்தை சுற்றி மையமாக வைத்து நிலம் எடுப்பதாக தகவல் பரவியுள்ளதால் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புதிய விமானம் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அன்றாடம் பல்வேறு கட்ட போரட்டங்களிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு மேலாக இப்போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் அரசியல் தலைவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் 67வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் பள்ளி சிறுவ, சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என தங்களது குடும்பத்தாருடன் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடிகளையும், பதாகைகளையும் தங்களது கைகளில் ஏந்திக்கொண்டும், வேளாண்மை வேண்டும், விமான நிலையம் வேண்டாம், அழிக்காதே அழிக்காதே வேளாண்மையை அழிக்காதே, சோறு போடும் மக்களை கூறு போட்டு பார்ப்பதா, காப்போம் காப்போம் வேளாண்மையைக் காப்போம், எங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேற மாட்டோம் என பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் நெல்வாய், தண்டலம், மடப்புரம் உள்ளிட கிராம மக்களும் தங்களது பணிகளுக்கு சென்றுவிட்டு இரவு நேர போராட்டத்தில் இணைந்துள்ளனர். இப்போராட்டங்களால் பரந்தூர் சுற்று வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,390.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.