Show all

அந்த மாற்றங்கள் என்னென்ன! கதையில் இருந்து மாறுபடும் பொன்னியின் செல்வன் திரைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில், தெய்வத்திரு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், தற்போது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. திரைப்படத்தில் சில காட்சிகள் மாற்றப்பட்டு உள்ளன. அந்த மாற்றங்கள் என்னென்ன? என்பதற்கானது இந்தக் கட்டுரை.

14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மணிரத்னம் இயக்கத்தில், தெய்வத்திரு கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், தற்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்களாக இந்தப் படம் வெளியாகிவிருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ளது முதலாவது பாகம் ஆகும்.

தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படத்தில் கதை வெகுவாக சுருக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சில காட்சிகள் மாற்றப்பட்டும் உள்ளன. அந்த மாற்றங்கள் என்னென்ன?

அ. கதையின் தொடக்கம்: நாவலில் கதையானது, வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் ஓலையோடு வீராணம் ஏரிக் கரை மீது பயணம் செய்வதாகத் துவங்கும். திரைப்படத்தில் ராஷ்டகூடர்களுடனான போருடன் துவங்குகிறது. ஓலைக்குப் பதிலாக தனது வாளைக் கொடுத்து வந்தியத்தவேனை அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன்.

ஆ. கடம்பூர் மாளிகைச் சதி: நாவலைப் பொறுத்தவரை, வந்தியத்தேவன் தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில் தனது நண்பன் கந்தமாறனின் மாளிகையில் தங்கும்போது தற்செயலாக ஆதித்த கரிகாலனுக்கு எதிராக பெரிய பழுவேட்டரையர் செய்யும் சதி தெரிய வருகிறது. ஆனால், திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனே கடம்பூரில் சதி நடக்கவிருப்பதாகக் கூறுகிறான்.

இ. குடந்தை சோதிடர்: பொன்னியின் செல்வன் நாவலில் ஒரு முதன்மையான பாத்திரம் குடந்தை சோதிடர். இவரிடம் அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் சாதகமும் இருக்கும். இந்த சோதிடரின் இல்லத்தில்தான் குந்தவையும் வந்தியத்தேவனும் பார்ப்பார்கள். ஆனால், திரைப்படத்தில் இந்தப் பாத்திரம் வரவேயில்லை. திரைப்படத்தில் குந்தவைக்கும் வந்தியத்தேவனும் இடையிலான முதல் சந்திப்பு பழையாறையில் நடக்கிறது.

ஈ. முத்திரை மோதிரம்: நாவலில் நந்தினியிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெறும் வந்தியத்தேவன், தஞ்சாவூர் கோட்டைக்குள் மரியாதையாக உள்ளே அனுமதிக்கப்படுவான். ஆனால், திரைப்படத்தில் முத்திரை மோதிரத்தைக் காட்டியும் வீரர்கள் அவனைக் கட்டிப்போட்டுவிடுகிறார்கள்.

உ. சுரங்கப் பாதையில் கந்தமாறன் மீது கொலை முயற்சி: நாவலைப் பொறுத்தவரை நந்தினியின் அரண்மனையிலிருந்து அவனாகத்தான் சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்து தப்புவான். சுரங்கப் பாதைக்குள் சென்ற பிறகு, அந்த சுரங்கப் பாதையில் வைத்து சம்புவரையரின் மகனான கந்தமாறன் முதுகில் குத்தப்படுவதைப் பார்த்து, அவனைக் காப்பாற்றுவான். அந்தப் பழி வந்தியத்தேவன் மீதே விழும். ஆனால், திரைப்படத்தில் நந்தினியே அவரை சுரங்கப்பாதையில் அனுப்பிவைக்கிறாள். கந்தமாறன் மீதான தாக்குதல் நிகழ்வு படத்தில் இல்லை.

ஊ. பூங்குழலி அறிமுகம்: நாவலில் பூங்குழலியை வந்தியத்தேவன் கோடிக்கரையில் சந்திப்பான். அவளிடம் பேசி வலியுறுத்தி, அவளுடைய படகில் தன்னை இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறுவான். அப்படித்தான் இருவரும் அறிமுகமாவார்கள். திரைப்படத்தில், திடீரென பூங்குழலி பாத்திரம் அறிமுகமாகிறது. எப்படி இருவரும் சந்தித்தார்கள் என்பது இல்லை.

எ. சிற்றரசர்களுடன் குந்தவை சந்திப்பு: பழுவேட்டரையரின் மாளிகையில் சிற்றரசர்களைச் சந்திக்கும் குந்தவை, அவர்களைச் சஞ்சலப்படுத்துவதற்காக, தன் தம்பிகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கவிருப்பதாகக் கூறுவாள். தங்கள் வீட்டுப் பெண்ணை இளவசர்களுக்குக் கொடுக்கலாமே என்று எண்ணி சிற்றரசர்கள் யோசிப்பார்கள். இப்படி ஒரு காட்சி திரைப்படத்தில் வருகிறது. ஆனால், நாவலில் அப்படியான தருணம் ஏதும் கிடையாது.

ஏ. அருள்மொழிவர்மனைக் காப்பாற்றுவது யார்?: நாவலில் இலங்கையிலிருந்து புறப்படும்போது ஒரு கப்பலில் ஏறி, அந்தக் கப்பல் தீப்பிடித்து விட, வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் கடலில் மிதப்பார்கள். அப்போது அங்கு வரும் பூங்குழலி அவர்களைக் காப்பாற்றுவாள். திரைப்படத்தில் இதுதான் உச்சகட்ட காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாய் பேச முடியாத, நந்தினியின் சாயலில் உள்ள மந்தாகினிதேவியே இவர்களைக் காப்பாற்ற முயல்வதாக காட்டப்படுகிறது.

ஐ. பழையாறை: நாவலில் குந்தவை பழையாறையில் வசிக்கிறாள். பழையாறை என்பது அரசிலாறு, முடிகொண்டான் ஆறுகளுக்கு இடையில் உள்ள ஒரு சிறு நகரம். ஆனால், திரைப்படத்தில் ஒரு பேரளவான ஆற்றின் கரையில் உள்ள பகுதியாக இது காட்டப்படுகிறது. அதேபோல, இலங்கையும் கடற்கரையை ஒட்டி பேரளவான மலைகளை உடைய பகுதியாகக் காட்டப்படுகிறது. ஆனால், நாவலில் வரும் யானையிறவு, தொண்டைமானாற்று முகத்துவாரம் போன்றவை, தமிழக கடலோரப் பகுதிகளைப் போன்றவை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,388.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.