Show all

லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ நகை சிக்கியது கொள்ளையன் முருகனிடமிருந்து! ஆனாலும் இழுபறி

பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்கம்- வைர நகைகள் சிக்கியது. ஆனாலும் அந்த நகைகள் கருநாடக மாநிலத்தில் முன்பு கொள்ளையடிக்கப் பட்டவைகளா? அல்லது லலிதா நகைக்கடை நகைகளா என்பதில் இருமாநிலக் காவல்துறையினரிடையே இழுபறி நிலவுகிறது.

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி லலிதா நகைக் கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த காவல்ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (அகவை 34) என்பவரை காவல்துறையினர் பிடித்தனர். அப்போது அவரிடம் லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. விசாரணையில், திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (45), அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கிடையே திருச்சி திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல்நாயகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முருகன் தங்கி இருந்ததாக காவல்துறையினருக்கு கமுக்கத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அங்கு சென்று முருகன் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் இல்லை. முருகனும் இல்லை.

இந்த நிலையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முருகன் கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் அறங்கூற்றுமன்றத்தில்;, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் சரண் அடைந்தார். இதையடுத்து முருகனை 14 நாட்கள் அறங்கூற்றுமன்ற காவலில் வைக்க அறங்கூற்றுவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து முருகனை காவல்துறையினர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைத்தனர். பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை லலிதா நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆனால் திருச்சி காவல்துறையினருக்கு முன்பாகவே பெங்களூரு பொம்மனஅள்ளி காவல்துறையினர் பழைய திருட்டு வழக்கு சம்பந்தமாக முருகனிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பெங்களூரு மெட்ரோபாலிட்டன் 11-வது கூடுதல் அறங்கூற்றுமன்றத்தில் உடனடியாக மனு செய்தனர். 

இந்த மனு மீது விசாரணை நடத்திய அறங்கூற்றுமன்றம் முருகனை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க பொம்மனஅள்ளி காவல்துறைக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து முருகனை சிறையில் இருந்து காவலில் எடுத்த பொம்மனஅள்ளி காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.

அப்போது பொம்மனஅள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பான நகைகளை தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் புதைத்து வைத்திருப்பதாக முருகன் திடுக்கிடும் தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கர்நாடக காவலர்கள் முருகனை அழைத்து கொண்டு 2 கார்களில் கல்லணை அருகே விரைந்தனர். இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருப்பதாக முருகன் கூறிய கல்லணை அருகே காட்டு பகுதியில் உள்ள இடத்தில் காவல்துறையினர் தோண்டினர். அப்போது அங்கு கிலோ கணக்கில் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த நகைகளை கைப்பற்றிய கர்நாடக காவல்துறையினர், ஏற்கனவே முருகன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல் நாயகி நகரில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அங்கு சென்று சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு நகைகள் ஏதும் சிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட நகைகளுடன், முருகனை அறங்கூற்றுமன்றத்;தில் அணியப் படுத்தி சிறையில் அடைத்து விடலாம் என அவரை கார் மூலம் கர்நாடகத்திற்கு அழைத்து செல்லப் புறப்பட்டனர்.

இந்த சேதி: திருச்சி மாநகர, மாவட்ட காவல்துறைக்கு கமுக்கத் தகவலாகக் கிடைத்தது. முருகன் கூறிய இடத்தில் மீட்கப்பட்ட நகைகள் திருச்சி லலிதா நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், திருச்சி காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்து, முருகனை அழைத்து செல்லும் வாகனத்தை பிடிக்குமாறு உத்தரவிட்டனர்.

நிஷா பார்த்திபன், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த 2 கார்களை வழிமறித்தனர். அதில் கர்நாடக காவல்துறையினர் இருந்தனர். அவர்கள், எங்கள் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய நகைகளை கொள்ளையன் முருகனுடன் வந்து எடுத்து செல்வதாக கூறி தமிழக போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கர்நாடக காவல்துறையினர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து அந்தக் கார்களை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெங்கனூர் பகுதியில் அரும்பாவூர் காவல்துறையினர் மடக்கி பிடித்து பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை திடலுக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் மற்றும் திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான காவலர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து ஆயுதப்படை திடலில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து முருகனிடம் தமிழக காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லணை அருகே காட்டு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் அனைத்தும் திருச்சி லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தாம் என தெரியவந்தது. மீட்கப்பட்ட 11½ கிலோ தங்க நகைகளையும், ½ கிலோ வைர நகைகளையும் திருச்சி மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கர்நாடக காவல்துறையினர் முருகனிடம் மீட்கப்பட்ட நகைகள் திருச்சி லலிதா நகைக்கடை நகைகளாக இருந்தாலும், அதனை நாங்கள் கர்நாடக மாநில அறங்கூற்றுமன்றத்தில் சமர்ப்பித்து, முருகனை அணியப்படுத்துவோம். அதன்பிறகு தமிழக காவல்துறையினர் முருகனை காவலில் எடுத்து விசாரிக்குமாறு தெரிவித்தனர். இதனால் நேற்று காலை 11.30 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,304.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.