Show all

குனிந்து பாருங்கள் மோடி, தமிழர்கள் கழுத்தைக் கட்டிக் கொள்வார்கள்! உயரம் தொட்டுப் பார்த்த மகிழ்ச்சியில் தமிழர்கள் அழுது விடுவார்கள்

குனிந்து பாராட்டினால்தான் குழந்தைகள் நம் கழுத்தைக் கட்டிக் கொள்ளும் அழகை நாம் கொண்டாட முடியும் என்பது தமிழர் கருதுகோள். அதைத்தாம்: 
‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்     செல்வர்க்கே செல்வம் தகைத்து’ என்பார் தமிழ்முறை (மறை அல்ல) வகுத்த பெருமகனார். இதை தமிழகத்தில் வைத்து மோடிக்கு உணர்த்தினார் சீனத்து ஜி ஜின்பிங்க்

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குனிந்து பாராட்டினால்தான் குழந்தைகள் நம் கழுத்தைக் கட்டிக் கொள்ளும் அழகை நாம் கொண்டாட முடியும் என்பது தமிழர் கருதுகோள். அதைத்தாம்: 
‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்     செல்வர்க்கே செல்வம் தகைத்து’ என்பார் தமிழ்முறை (மறை அல்ல) வகுத்த பெருமகனார்.

இந்த முறை மோடிக்கு இது சாத்தியமானது; தமிழர்தம் வரலாற்று தொடர்பு சீனத்து ஜி ஜின்பிங்குடன் கைகோர்த்து வந்ததால். நேற்று வரை திரும்பிப் போ மோடியை கீச்சுவில் தலைப்பாக்கிய தமிழர்கள் இந்த முறை ‘திரும்பிப் போக வேண்டாம் மோடி அவர்களே’ என்பதை தமிழர்கள் தலைப்பாக்கினார்கள் கீச்சுவில்.

கடந்தமுறையெல்லாம் பாஜகவின் தாயத்து விற்பனையின் தமிழகக் கிளையின் பொறுப்பாளர்கள் மோடியைப் பல்லக்கில் அமர்த்தி வந்தார்கள். அதற்கு மேலும் உலங்கு வானூர்தியில் தூக்கிக் கொண்டு சுற்றினார்கள். பல்லக்கில் பயணித்த போது கருப்புக்கொடி காட்டி திரும்பிப் போ மோடி என்று சொன்ன தமிழர்கள், உலங்கு வானூர்தியில் உயரப்பறந்த போது கருப்பு பலூன் விட்டு திரும்பிப் போ மோடி என்று, வான் நோக்கி நின்று எக்காளமிட்டார்கள்.

உலங்கு வானூர்தியில் மக்களுக்கு எட்டாமல் உயரப் பறப்பதில் சீனத்தலைவர்களுக்கு உடன்பாடில்லை என்று மோடியுடன் உலங்கு வானுர்தியில் ஏறமறுத்து சீனத்து ஜி ஜின்பிங்- மோடி அவர்களையும் மாமல்லபுரத்து தரையில் நடத்தினார்கள். வரவேற்புகளை தமிழக அரசு முன்னெடுத்தது; தாயத்து விற்பனையின் தமிழகக் கிளைப் பொறுப்பாளர்கள் அல்ல. 

இந்திய, சீன தலைவர்களின் சந்திப்பில், உணவக வளாகத்தில், மின்கல கார் ஓட்டிய ஓட்டுநரை, தலைமைஅமைச்சர் மோடி பாராட்டினார்.

சென்னை கோவளத்தில் உள்ள, தாஜ் மீனவக்குகை மின்மினி உணவகத்தில், தலைமைஅமைச்சர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து உரையாடினர். அதன் முன், முற்றப் பகுதியில் இருந்து, உணவக வளாகத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த, தோட்ட குடிலுக்கு, மின்கல காரில் சென்றனர். அந்த மின்கல காரை, உணவக ஊழியர் தேவேந்திரன் ஓட்டினார். அவரிடம், தலைமைஅமைச்சர் மோடி பேசினார். சில கேள்விகளையும் கேட்டார். 

இதுகுறித்து, மின்கல கார் ஓட்டுநர் தேவேந்திரன் கூறியதாவது: தலைமைஅமைச்சரின் கேள்விகளுக்கு, நான் பதில் கூறினேன். என் பெயரை கேட்டார்; தேவேந்திரன் என்றேன். ‘எத்தனை மணி நேரம் வேலை’ என, கேட்டார். ‘எட்டு மணி நேர வேலை’ என்றேன்.

‘குழந்தைகள் உள்ளதா...’ என கேட்டார். ‘ஆமாம் ஐயா. எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவள், செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொறியியல்;, கணினிஇயல் படிக்கிறாள்’ என்றேன். இதைக் கேட்ட தலைமைஅமைச்சர், ‘உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. உங்கள் பெண் குழந்தையை நன்றாக படிக்க வைக்கிறீர்கள்’ என்று, பாராட்டினார். தலைமை அமைச்சர் என்னிடம் பேசி பாராட்டிய போது, உணர்ச்சி வசப்பட்டு, என் கண்ணில், ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார். 

ஆம் தமிழர்கள் உச்சத்தை தொட்டுப் பார்க்க வாய்ப்பு கிடைத்தாலே உணர்ச்சிவயப்பட்டு அழுது விடுவார்கள். இந்த வாய்ப்பு இந்த முறை சீனத்து ஜி ஜின்பிங்கால் மோடி அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சாத்தியமானது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,304.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.