Show all

வழிமறித்து பைக் சாவியை எடுத்த போக்குவரத்துக் காவலரிடமிருந்து, ஒருமணி நேரப் போராட்டத்தில் பைக் சாவியை மீட்ட இளைஞர்

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோதி ரமேஷ் என்பவர் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மது அருந்தி வாகனம் ஓட்டியதாகக் கூறி போக்குவரத்துக் காவலர் பைக் சாவியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஜோதி ரமேஷ், கோவில்பட்டி மாதாகோவில் தெரு சந்திப்பு வளைவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, அருகே விளம்பரப் பதாகைகளுக்காக கட்டப்பட்டுள்ள கம்பின் மீது ஏறி முழக்கமிட்டார்.

தகவலறிந்தவுடன் உதவி ஆய்வாளர்கள் ராமசாமி, வசந்தகுமார், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரைக் கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால், இறங்கி வர மறுத்த ஜோதி ரமேஷ் வாகனத்தின் சாவியை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், விளம்பரப் பதாகைகளுக்காக கட்டப்பட்டிருந்த கம்பு ஒன்றை எடுத்து மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார வயரைத் தாக்க முயன்றார். அதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஜோதி ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 6.45 மணிக்கு ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதி ரமேஷ் சுமார் 7.45 மணிக்கு கீழே இறங்கி வந்தார்.

பிறகு ஜோதி ரமேஷின் பைக் சாவியைக் கொடுத்ததோடு, இதுபோன்று இனி அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று அவரை எச்சரித்து காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.