Show all

மருத்துவக் கல்லூரி மதிப்போடு இருப்பதும், பொறியியல் படிப்பு பொருளற்றுப் போவதும் ஏன்!

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மருத்துவக் கல்லூரிகளில் அவ்வளவு எளிதாக இடம் கிடைத்து விடாது. தற்போது நடுவண் கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதற்காக நடுவண் அரசு நீட் தேர்வை நடத்தி, நடுவண் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களாகப் பொறுக்கி எடுக்கும் வகையாக சல்லடைகளை உருவாக்கி, மாணவர்களை சல்லடையால் சலித்துப் பொறுக்குகிறது. மருத்துவக் கல்வியின் மீது ஏன் இவ்வளவு மோகம். 

மருத்துவக் கல்லூரிகளை பெரும்பாலும் அரசு நடத்துகிறது. மருத்துவக் கல்லூரிகளை மருத்துவமனையோடு இணைந்து நடத்துகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தரமான மருத்துவமனை உள்ள நிறுவனங்களுக்கே கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப் படுகிறது.

ஒரு மருத்துவக் கல்லூரி என்பது மாணவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். தமிழகம் இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவக் கல்லூரிகளைக் கட்டமைத்து இருக்கிறது. 

நடுவண் அரசின் நரித்தந்திரம் தான் தமிழகக் கல்லூரிகளில் நடுவண் வாரியக் கல்வி பெற்றவர்களை போட்டியில் இணைப்பதற்கான நீட் தேர்வு.

எது எப்படியிருந்த போதும் மருத்துவக் கல்லூரிகள் தன்னம்பிக்கையோடு தொழில் தொடங்கவோ, உடனடியாக வேலைக்கு செல்லவோ தகுதியாக மருத்துவர்களை உருவாக்கி அனுப்புகிறது என்பது மட்டும் உண்மை. அந்த நம்பகமே அந்தத் துறையின் மீதான மோகத்திற்கான காரணம்.

சரி பொறியியல் கல்லூரியின் நிலையென்ன? பொறியியல் கல்லூரிகளைப் பணம் படைத்த யார் வேண்டுமானாலும் அனுமதி பெற்றுத் தொடங்கி விடலாம். பொறியியல் கல்வி தொடங்குகிறவர்களுக்கு மாணவர்களுக்கு செயல்முறை பயிற்றுவிக்க- மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவமனைகள் போல, பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில் நிறுவனங்கள் வேண்டாவா?

தொழில் நிறுவனங்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு, தகுதியான மாணவர்களை உருவாக்க என்ன தகுதியிருக்க முடியும். வெறுமனே கோட்பாடுகளை மட்டும் கற்றுச் செல்லும் மாணவர்கள் எப்படி வேலைவாய்ப்பு தேடும் தளத்தில் போட்டியிட முடியும். 

தொழில் நிறுவனங்கள் உள்ளவர்களுக்குதாம் பொறியியல் கல்லூரி என்றால், தங்கள் நிறுவனத்திற்கு என்றாவது செய்முறையிலும் தகுதியான மாணவர்களை உருவாக்குவார்கள்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, தொழில் தொடங்க தன்னம்பிக்கையோ, உடனடியாக வேலைவாய்ப்போ உருவாக்கி தர முடிய வேண்டுமென்றால், மருத்துவக் கல்லூரிகளுக்குப் போல, பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும் தொழில் நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனை ஆக்க வேண்டும். 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,057.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.