Show all

சிக்கும் ஆழ்கடல் உயிரினங்களை மீண்டும் கடலில் விட்டுவிடும் மீனவர்கள்! எங்கே? ஏன்?

பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் சிக்கும் ஆழ்கடல் உயிரினங்களை மீண்டும் கடலில் விட்டுவிடும் மீனவர்களுக்கு பொருள் சேதம் ஏற்படுகிறது. மீனவர்கள் இழப்பை ஈடுகட்ட சேதமடைந்த வலைக்கு மாற்றாக புதிய மீன்பிடி வலையை அரசு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கான ஆதரவு வலுத்து வருகிறது.

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆழ்கடலில் வாழும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் கடலோரத்தில் மீன் பிடிக்கும் சிறு மீனவர் வலைகளில் அண்மைக்காலமாக அவ்வப்போது சிக்கி வருகின்றன. 

வடகிழக்கு பருவ மழை தொடங்கியபிறகு இப்படி தங்கள் வலைகளில் உயிரோடு சிக்கும் கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள்ளே விடுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள். 

இது குறித்து வலையில் சிக்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பாக கடலில் விட்ட  மீனவர் ஜிம்மி காட்டர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாவது: பருவ மழை காலங்களில் கடல் நீரோட்டம் காரணமாக இவ் வகை கடல் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மட்டம் குறைந்த பகுதிக்கு உணவுக்காக வந்து நீர்மட்டம்  உயரும் வரை மணல் திட்டுகளில் தங்கி விடும். அப்போது கரை ஓரங்களில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வலையில் இவை சிக்குகின்றன. 

கடல் பசு தனது குட்டிகளுக்கு உணவளிக்கவும், வேட்டையாடவும், கடலடி  மணல் திட்டுகளின் இடையில் உள்ள தாவு பகுதிக்கு வரும் போது  அதனை நாட்டுப்படகு மீனவர்கள் இறைச்சிக்காகவும், மருத்துவ குணத்துக்காகவும் பிடித்து  வெட்டி விற்பனை செய்வது முன்பு வழக்கமாக இருந்தது. 

இவைகள் அருகி வருகின்றன என்றும், இவைகள் கடலுக்கு எவ்வளவு முதன்மைத்துவம் என்றும் விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால் இவற்றை மீனவர்கள் தற்போது தொந்தரவு செய்வதில்லை, என்கிறார்.

இராமநாதபுரம் அடுத்த அழகன்குளம் அம்மன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதத்தில், ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதிக எடை கொண்ட மிகப்பெரிய  புள்ளி திமிங்கலம் ஒன்று சிக்கியது. மீனவர்கள் அதை பாதுகாப்பாகக் கடலில் விட்டனர்.

அடுத்ததாக இராமநாதபுரம் அடுத்த கீழக்கரை கடற்கரையில் மூன்று கிழமைகளுக்கு முன்பு, மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது  வலையில் சுமார் 60 கிலோ எடை கொண்ட  டால்பின் மீன்கள் இரண்டு உயிருடன் சிக்கின.

அவை இரண்டையும் வலையில் இருந்து பத்திரமாக பிரித்தெடுத்த மீனவர்கள் அவற்றைக் கடலில் விட்டதாகத் தெரிவித்தனர். 

மீண்டும் கடந்த கிழமை  இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர்  கடற்கரையில் மீனவர்கள் கரை வலை முறையில்  மீன் பிடித்துவிட்டு கடற்கரையில் வைத்து  வலையில் இருந்து மீன்களை பிரிக்கும் போது அதில் கடல் பசு மற்றும் சித்தாமை இருந்தது தெரிய வந்ததது.  மீனவர்கள் இரண்டையும் பாதுகாப்பாகக் கடலில் விட்டனர்.

கடல் பசு, கடல் ஆமை,  டால்பின் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை குறைவதால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என மீனவர்கள் நடுவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் அண்மைக் காலமாக மீனவர்கள் தங்களது வலைகளில் சிக்கும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை கடலில் பாதுகாப்பாக விட்டு விடுவது அதிகரித்து வருகிறது என்று தெரியவருகிறது.

வலையில் சிக்கும் கடல் பசு, கடல் ஆமைகளை ஒரு சில மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக விடுவார்கள். ஆனால் நிழற்படம், காணொளி எடுப்பதில்லை. ஆனால் தற்போது வலையில் சிக்கும் இவைகளை கடலில் விடும் காணொளி, நிழற்படம் போன்றவற்றை வனத்துறையினரிடம் வழங்கினால் மீனவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுவதால் மீனவர்கள் அந்த வகையிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த காணொளிகள் சமூக வலைத் தளங்களில் அதிகம் பகிரப்படுவதால் மீனவர்கள் வலையில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் சிக்குவது பொது மக்கள் மக்கள் நடுவே பரவலாக தெரிய வருகிறது.

தங்கள் வலையில் சிக்கும் அரிய வகை உயிரிகளை மீட்க சில நேரங்களில் மீனவர்கள் தங்களது வலைகளை அறுத்து விடுகின்றனர்.

இதனால் மீனவர்களுக்கு பொருள் சேதம் ஏற்படுகிறது. மீனவர்கள் இழப்பை ஈடுகட்ட சேதமடைந்த வலைக்கு மாற்றாக புதிய மீன்பிடி வலையை அரசு வழங்க வேண்டும்.

கடலில் உயிருடன் பாதுகாப்பாக விடும் மீனவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் அரசு அதனை செய்தால் உறுதியாக அழிவின் விளிம்பில் உள்ள கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை உயரும் என்று தெரிவிக்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கு.சிவக்குமார்

இராமநாதபுரம் மாவட்ட வனக்காப்பாளர்  பகான் ஜகதீஷ் சுதாகர், மன்னார் வளைகுடா  மற்றும் பாக் நீரினை கடல் பகுதியில் கடல் பசுவை பாதுகாப்பதற்குத் அரசு பல முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறுகிறார்.

மீனவர்களின் வலைகளில் சிக்கும் அரிய வகை கடல் வாழ்  உயிரினங்களை கடலில் விடும் மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் நான்கு இடங்களில் வலையில் சிக்கிய டால்பின், ஆமை, திமிங்கலம், கடல் பசு உள்ளிட்டவைகளை கடலில் விட்ட மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம், என்கிறார் மாவட்ட வனக்காப்பாளர்  பகான் ஜகதீஷ் சுதாகர்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் மீனவர்கள் தங்களது விலை உயர்ந்த வலையை அறுத்து அதில் உள்ள அரிய வகை கடல் வாழ் உயிரினங்களளை மீட்டு கடலில் விடும் போது வலை சேதமடைகிறது. எனவே  மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வலைகளுக்கான பணத்தை வழங்குவது குறித்து வனத்துறை திட்டமிட்டு வருவதாகவும் பகான் ஜகதீஷ் சுதாகர் தெரிவிக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,464.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.