Show all

செல்பேசி திருடர்கள் தப்பி மோட்டார் சைக்கிளில் விரைந்தபோது, லாரியில் விழுந்து ஒருவர் மரணம்! லாரியோட்டி வந்தவர் அடித்துக் கொலை

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அம்பத்தூர் புதூர் திருமலைபிரியாநகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் வீராங்கன் அகவை45 லாரி ஓட்டுநரான இவர், வியாழன் இரவு தான் ஓட்டிவந்த லாரியை மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் சாலையில் நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக, செங்குன்றம் மாதவரம் கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவைச் சேர்ந்த பழனி என்பவருடைய மகன் சுகுமார் அகவை19 மற்றும் 17 அகவையுடைய, அவருடைய தம்பி மற்றும் நண்பருடன் மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். 

அந்த மூவரும், வீராங்கனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்பேசியைப் பறித்தனர். லாரி ஓட்டுநரிடம் செல்பேசியைப் பறித்துவிட்டு அவர்கள் தப்பித்து, மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் அவர்கள் வேகமாக சென்றபோது, திடீரென நிலைதடுமாறி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மணலியில் இருந்து இரும்புலோடு ஏற்றிவந்த லாரி, கொள்ளையன் சுகுமார் மீது ஏறி இறங்கியது.

லாரி சக்கரத்தில் சிக்கிய சுகுமார், அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். சக கொள்ளையர்கள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கொள்ளையர்கள் 3 பேரும் அப்போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சுகுமார் பலியானதால் ஆத்திரம் அடைந்த சக கொள்ளையர்கள் இருவரும், சுகுமாரின் உயிரை பறித்த லாரியின் ஓட்டுநரான வேலூர் மாவட்டம் ஆற்காடு எசையனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி அகவை50 என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் மணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் பால்பண்ணை காவல்துறை ஆய்வாளர் கண்ணன் மற்றும் காவலர், விபத்தில் பலியான கொள்ளையன் சுகுமார் மற்றும் அடித்துக்கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் மணி ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சக கொள்ளையர்களான 17 அகவை சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருவொற்றியூர் அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,918.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.