Show all

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை எளிதாக வென்றது இந்தியா

துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர்-4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்திய அணியில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் வங்காளதேச அணி 49.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதைத்தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தவான் 40 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 13 ரன்களிலும், டோனி 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதில் இந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களுடனும் மற்றும் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். நேற்று நடைபெற்ற மற்றொரு சூப்பர்-4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியை போராடி வீழ்த்தியது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.