Show all

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் வைகோ உருக்கமான பேச்சு

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரபாகரனுக்கு நிகராக ஆயுதப்புரட்சி நடத்திய தலைவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. தனி மனித ஒழுக்கத்திலும், அவரது அமைப்பில் அவர் கடைபிடித்த கட்டுப்பாட்டு ஒழுங்கையும் எவராலும் செய்ய முடியாது.

எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் தரைப்படை, கடற்படை, வான்படை அமைத்து சிங்கள படைகளைச் சிதறடித்து வெற்றிபெற்று வந்த வேளையில் இந்திய அரசு மிகவும் நயவஞ்சகமாக பல வல்லரசுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை பெறுவதற்கான கோடிக் கணக்கான பணத்தையும் கொடுத்து, நவீன ஆயுதங்கள் மட்டுமின்றி உலகம் தடை செய்த ஆயுதங்களையும் வைத்து நம்முடைய முப்படை தளபதிகள் பலமுறை சென்று அந்த யுத்தத்தை இந்திய அரசே பின்னால் இருந்து இயக்கியதால் தான் விடுதலை புலிகளை அவர்கள் போர்க்களத்திலே தோற்கடிக்க முடிந்தது.

அவர் சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை அமைத்த பொழுது அந்த கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மது கிடையாது, விபச்சாரம் கிடையாது, திருட்டு கிடையாது, கல்வித் துறை, வேளாண்துறை, தமிழ் ஆராய்ச்சி துறை, அறங்கூற்றுத்துறை, காவல் துறை உள்ளிட்ட எல்லா கட்டமைப்புகளையும் உருவாக்கி அங்கீகரிக்கப்படாத மிகச் சிறப்பானதொரு சுதந்திர தேச அரசை நடத்தி வந்தார்.

சிங்களர்கள் தமிழர்களை அடிமைப்படுத்துகின்ற விதத்தில் தொடர்ந்து கொடுமைகள் செய்து, தந்தை செல்வாவினுடைய அறப்போராட்டம் பயனற்றுபோன நிலையில் தான் தந்தை செல்வா இனி சம வாழ்வு சாத்தியமில்லை. சுதந்திர தமிழ் ஈழ தேசம் ஒன்றே தீர்வு என்று அறிவித்துவிட்டு இளைய தலைமுறை முன்னெடுத்து செல்லட்டும் என்றார். எனவே அந்த கனவுகள் நிச்சயம் ஒருநாள் நனவாகும்.

தமிழ் குல வரலாற்றில் பிரபாகரனுக்கு நிகரான தலைவர் தோன்றியது கிடையாது. இந்த நாள் உறுதி எடுத்துக்கொள்கிற நாளாகவும், நாளைய நாளை களத்திலே உயிர்களைத் தந்த மாவீரர்களுக்கு மாவீரர் நாளாகவும் கொண்டாடு கிறார்கள்.

உலகெங்கும் உள்ள எண்ணற்ற தமிழர்கள் இந்த நாளில் பிரபாகரனின் பிறந்த நாளை மனதில் எண்ணி கொண்டாடி நாளை மாவீரர் நாளையும் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு அவர் உருக்கமாகப் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,618

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.