Show all

வைகோ வருத்தம்! இயற்கையின் அறங்கூற்றுத் தீர்ப்பு காவிரியைப் பெற்றுத் தந்தும், காத்துக் கொள்ளும் அரசாய் இல்லையே?

ஒவ்வொரு ஆண்டும்: காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில்,  (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர் அரசியல். இயற்கை அவர்களின் பிடரியில் அடித்து, ‘காவிரியை விடுவிக்கிறாயா அணையை இழக்கிறாயா என்று கேட்டு தமிழகத்திற்கு காவிரியை மீட்டுத் தருவது அறங்கூற்று. இந்த ஆண்டு இயற்கையின் அறங்கூற்று தீர்ப்பு ஆண்டு. தமிழக அரசின் பொறுப்பின்மையை சுட்டிக்காட்டி, ஆனால் என்ன செய்ய? என்று வருந்துகிறார் வைகோ. 

27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முக்கொம்பு கட்டுமான பணி முடியாததால் காவிரி வெள்ளம் கடலில் கலக்கப்போகிறது என்கிறார் வைகோ. முக்கொம்பு கட்டுமான பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்தியதாக தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பெரும் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.

இந்நிலையில், பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், காவிரி பாசன மாவட்டங்களுக்கு முழுமையாகப் பயன்படாமல், கடலில் போய் வீணாக கலந்துவிடும் நிலை கவலை தருகிறது. ஏனெனில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் ஏழு மதகுகள் கடந்த ஆண்டு முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

காவிரியில் அதிக அளவில் வரும் தண்ணீர், காவிரி ஆற்றில் முழுமையாகச் செல்ல முடியாது என்பதால், முக்கொம்பு பகுதியிலிந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

முக்கொம்பு மேல் அணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 183 ஆண்டுகளுக்கு முன்பு 630 மீட்டர் நீளம், 45 மதகுகளுடன் முக்கொம்பு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மதகுகள் உடைந்ததால் புதிய அணை கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இதற்காக ரூபாய் 387.60 கோடி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை கடந்த ஆண்டு இறுதியில் தமிழக அரசு வெளியிட்டது.

முக்கொம்பில் 55 கதவு அணைகளுடன் புதிய அணை கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக புதிய அணை பணிகள் துரிதமாக நடைபெறாததால், அணை கட்டுமானம் முதற்கட்டப் பணியோடு நின்று விட்டது. இந்தப் புதிய அணையிலிருந்து 2 லட்சத்து 83 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். இதனால் தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தற்போது, காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் முழுவதும் விழலுக்கு இறைத்த நீராக கடலில் சென்று கலந்துவிடும். கடந்த ஓராண்டு காலமாக முக்கொம்பு புதிய அணைப் பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்திய தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது மேட்டூரிலிருந்து திறந்துவிடும் நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காமல், காவிரி கழிமுக சாகுபடிக்குப் பயன்படும் வகையில் தகுந்த மாற்று ஏற்பாடுகளை விரைந்து செய்திடுமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
பொறியாளர்களின் தகுந்த ஆலோசனைகள் மூலம், தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொண்டு, இயற்கை அறங்கூற்றுத் தீர்ப்பில் கிடைத்த தண்ணீரை வீணாக்கமல் பயன்படுத்துவதற்கு எடப்பாடி பன்னீர் அதிமுக அரசு ஏதாவது முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஒரு வகையிலும் உருப்படாத அரசாக தொடரும் தங்கள் மீது இயற்கையின் அறங்கூற்றுத் தீர்ப்பு மிகக் கடுமையாக இருக்கப் போகிறது என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,242.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.