Show all

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க, நடுவண் அரசிடம் தூதுசெல்ல, ஆளுநர் நேரில் ஆய்வா!

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோயம்புத்தூரில் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க சென்ற இடத்தில் நடுவண் அரசின் திட்டங்களைப் பார்வையிடுவதாகக் கூறி களத்தில் குதித்தார். அங்குள்ள ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளையும், காவல் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசித்தார்.

பன்வாரிலால் புரோஹித்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதற்கெல்லாம் அசராமல், ‘அரசியல் சட்டத்தில் அதிகாரிகளை அழைத்து ஆளுனர் ஆலோசனை நடத்த எந்தத் தடையும் இல்லை என தில்லாக சொன்னார். இதே ஆலோசனையை மாவட்ட வாரியாக செய்யப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.

தற்போது திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த பன்வாரிலால் புரோஹித் அங்கே இருந்தது சிறிது நேரம்தான்.

இன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலி, வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அரசு சாரா அமைப்புகள், அரசியல் கட்சியினர் என தன்னை சந்திக்க விரும்புகிற யாரையும் சந்தித்து குறைகளை கேட்டறிகிறாராம் ஆளுநர்.

இன்று மாலையில் கன்னியாகுமரி சென்று தங்கும் பன்வாரிலால் புரோஹித், நாளை மாலை 4 மணிக்கு அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சியினர், அரசு சாரா அமைப்புகளிடம் மனு பெறுகிறார். இது தொடர்பாக கன்னியாகுமரி ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுமக்கள் உள்பட யார் வேண்டுமானாலும் ஆளுனரிடம் மனு கொடுக்கலாம் என கூறியிருக்கிறார்.

பன்வாரிலால் புரோஹித் எங்கே திடீர் ஆய்வு நடத்துவாரோ, என்ன குறை சொல்வாரோ? என்கிற பதற்றத்தில் உடைந்த சாலைகளை சரி செய்வது, முக்கிய இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது என அதிகாரிகள் பம்பரமாக சுழல்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் புதிதாக ஆளுனரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் ஆர்.ராஜகோபால் உடன் செல்கிறார். மூத்த ஆளுமைப் பணித்துறை அதிகாரியான அவருக்கு தமிழகத்தில் எங்கே என்ன பிரச்னை? ஆட்சிப்பணித்துறை அதிகாரிகளை எப்படி வேலை வாங்க வேண்டும். என அனைத்தும் அத்துபடியாம். அவரது துணையுடன், பன்வாரிலால் புரோஹித் கையில் லகான் சுழல்கிறதாம்.

அதெல்லாம் சரி! குமரிமாவட்டத்தின் பாதிப்புகளை கண்டறிந்து, காணாமல் போன மீனவர்கள் மீட்பு, பாதிப்புகளுக்கு மறுவாழ்வு மற்றும் நிவாரணங்களுக்காக கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க நடுவண் அரசிடம் தூது செல்வாரா! அதுதான் இன்றைய தேவை.

அத விட்டுட்டு, சும்மா ஆளும் அரசுக்கு! ஓடு மோடியின் காலைப் பிடி என்று அதட்டல் விடுவதற்கான அதிரடி என்றால் மக்கள் சரியான நேரத்தில் ஆப்பு அடிப்பார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,628

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.