Show all

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இந்தப் பாடல்! வெகுண்டெழுந்த தமிழிசை சௌந்திரராஜன் மகனுக்காக அன்றே பாடியதோ.

தமிழிசை சௌந்திரராஜன் குடும்பம் பாரம்பரியமான தமிழ்க்குடும்பம். ‘பைந்தமிழில் பணவிடைத்தாள் தருக’ என்று நடுவண் அரசின் அஞ்சல் நிலையத்தில் போராடியவர் தமிழிசையின் அப்பா குமரி அனந்தன் அவர்கள். பாஜகவில் தமிழிசை சேர்ந்தது அவருக்கு பிடிக்காமல் தமிழிசையோடு பேசாமல் இருந்தார் என்று தமிழிசையே தெரிவித்திருக்கிறார். இவ்வாறன நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு தமிழிசையின் மகனுக்கும், தமிழிசை பாஜகவில் இருப்பது பிடிக்கவில்லை என்பதை பறைசாற்றுவதாக இருக்கிறது.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மகன் சுகநாதன் பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

இதை கண்டு அங்கு விரைந்த தமிழிசையின் பாதுகாவலர்கள் சுகந்தனை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், குடும்ப பிரச்சனை காரணமாக தனது மகன் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டதாக விளக்கமளித்தார்.

புரட்சிகவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழிசையின் மகனுக்காக அன்றே பாடிய கவிதையோ இது!
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு 
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! 
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் 
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! 
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே 
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு! 
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க தமிழர் நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,178.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.