Show all

தேவை மூன்றாவது ஒரு தமிழ்நாடு நாள்!

தமிழ்நாட்டில் எது தமிழ்நாடு நாள்? தமிழ்நாடு என்று பெயர் சூட்டிக்கொண்ட நாளா? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் மொழி அடிப்படை மாநிலங்களாக உரிமை கிடைத்த நாளா என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆடிமாதம் இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை தமிழ்த்தெடராண்டு 5069 அன்று (18.07.1967)  மெட்ராஸ் மாகணம் என்று இருந்தது, தமிழ்நாடு என பெயர் மாறியது

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாளை தமிழ்நாடு நாள் என்று கொண்டாட தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட ஆடி இரண்டாம் நாளை தமிழ்நாடு நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு உருவான வரலாறு தொடர்பான சுவரொட்டிகளை பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழ்நாடு நாள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கலைவாணர் அரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மணல் சிற்பமும் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சல்லிக்கட்டு, எலியட்ஸ் கடற்கரைகள், செம்மொழி பூங்கா, மையச் சதுக்கம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடைபெற உள்ளன. கலை பண்பாட்டு துறை சார்பில், தமிழ்நாட்டில் 20 இடங்களில், தமிழ்நாடு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 

இந்தியா விடுதலை பெற்ற மூன்று ஆண்டுகளில், தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். இதுவே தமிழ்நாடு பெயர் மற்றத்திற்கான அடிப்படை ஆகும்.

இதற்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்பே, மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு, நாளது 16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5058, (01.11.1956) சென்னை மாநிலம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாகின. 

தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக்கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்டமும் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டு தற்போதுள்ள 'தமிழ் மாநிலம்' உருவானது.

மொழிவாரியாக உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டுமென பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இறுதியில் தமிழ்நாடு உருவானது என்பது வரலாறு.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் இரண்டாம் நாள் (18 சூலை)  கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்த பின்னர் தமிழ்;நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு என மாநிலத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடலாமா என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்ட நாளை தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு மட்டு;ம் கொண்டாடலாம். மொழிவழி மாநிலமாக தமிழுக்கு தமிழ்நாடும், புதுச்சேரி மாநிலமும் கிடைத்த நாளை தமிழ்மாநில நாள் என்று இரண்டு மாநிலங்களும் கொண்டாடலாம்.

ஆக இரண்டு நாளும் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய நாட்களே. இந்த இரண்டு நாட்களிலும் நாம் மூன்றாவது ஒரு நாளுக்கு சூளுரை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நாள் தமிழ்நாட்;டின் கல்வியில் இன்னொரு மொழிக்கான பாடத்திட்டம் இல்லாத நாளாக இருக்கவேண்டும். அந்த நாள் அறங்கூற்றுமன்றங்களில் நமக்கான தீர்ப்பில் இன்னொரு மொழி இல்லாத நாளாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டின் எல்லா அரசுப் பணிகளிலும் இன்னொரு மொழிக்கான அரசின் ஆதிக்கம் இல்லாத நாளாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வரி நேரடியாக தமிழ்நாட்டின் அரசுக்கு செல்வதாக இருக்க வேண்டும். இப்படி நிறைய இருக்க வேண்டும்களைக் கொண்ட தமிழ்ஆட்சி நாள் அக அமைய வேண்டும்.

மாணவர் நகலகம். நா.அருணாசலம் அவர்கள் தொடங்கி நடத்திய தமிழ்ச்சன்றோர் பேரவை, முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16,ஐப்பசி (நவம்பர் 1) தமிழ் மாநில நாளை, தமிழ்நாடு நாளாகத் தமிழகப் பெருவிழாவாக சென்னையிலும் மாவட்டங்களிலும் ஆண்டு தோறும் நடத்தி வந்தார். 

பெ.மணியரசனின் தமிழ்த்தேசியப் பேரியக்கமும் மற்றும் சில தமிழ் அமைப்புகளும் அப்போதிலிருந்து 16,ஐப்பசி (நவம்பர் 1) ஐத் தமிழ்நாடு நாளாகக் கடைபிடித்து வருகிறது. 

கன்னடர்களுக்கான தாயகமாக மைசூர் மாநிலம் அமைந்ந 16,ஐப்பசி (நவம்பர் 1) ஐ கருநாடகமும் கர்நாடக நாளாக சிறப்பாக பல ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறது.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,313.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.