Show all

பெருஞ்சோகம்! தரமான கல்வி என்கிற பொய்யான தேடலுக்கு பலியான பனிரெண்டாம் வகுப்பு மாணவி

தரமான கல்வி என்கிற பொய்யான தேடலுக்கு தமிழ்நாடு தந்து கொண்டிருக்கிற விலை பலநேரங்களில் உயிராகக்கூட அமைந்து விடுவது பெற்றோர்களை எச்சரிக்கிற பெருஞ்சோகமாகும். 

01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகத்திலேயே, பல்லாயிரம் ஆண்டுகளாக, கல்விக்கு தொடர்ந்து மதிப்பளித்து வரும் ஒரே இனம் தமிழனம் மட்டுமே. இது பெருமைக்குரிய முன்னெடுப்பு என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. 

ஆனால் இதில், தரமான கல்வி என்கிற பொய்யான தேடலுக்கு தமிழ்நாடு தந்து கொண்டிருக்கிற விலை பலநேரங்களில் உயிராகக்கூட அமைந்து விடுவது பெற்றோர்களை எச்சரிக்கிற பெருஞ்சோகமாகும். 

இதில், போதிய சமூக விழிப்புணர்வு எய்த வாய்ப்பில்லாத சிறார்களை எல்லாம், பள்ளிப்படிப்புக்கு எல்லாம்,  பெண் பிள்ளைகளை எல்லாம், இயல்புக்கு மாறான, தவறான கல்விக் கொள்கையை காசாக்கிக் கொண்டிருக்கிற கயவர்களை நம்பி விடுதியில் கையளிப்பது அறியாமையின் உச்சம் என்பதை பறைசாற்றுகிறது- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியின் மர்மான இறப்பு.

கடந்த புதன் கிழமை, மாணவி சிறீமதி விடுதியின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்த சூழலில் மாணவியின் மரணம் குறித்து தமிழ்நாடு சிறப்பு காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு மாணவ அமைப்பினர், பெற்றோர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இந்த நிலையில், மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த பெருஞ்சோகம் தொடர்பாக நியாயம் கேட்டு மாணவர் அமைப்பினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

மேலும் போராட்டத்தில் காவல்துறை வண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறைத் துணைத்தலைவர் பாண்டியன் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, கள்ளக்குறிச்சியில் கலவரத்தை கட்டுப்படுத்த கடலூரிலிருந்து 150 காவலர்கள் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில், கலவரக்காரர்கள் யாராக இருந்தாலும் காணொளிப் பதிவின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சின்ன சேலத்தில் போராட்டம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபட்டு, பொருள்களைச் சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. காவலர்களை தாக்கியவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது திட்டமிட்ட வன்முறை போல உருமாறி வருகிறது. போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,312. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.