Show all

ஊரெல்லாம் இதேபேச்சு: சர்கரை விலை ஏறிப் போச்சு

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவிலேயே தமிழகத்திற்கு என்று பல சிறப்புகள் உண்டு.

தமிழகம் தான் முதன் முதல் மாநிலக் கட்சி ஆட்சியைக் கொண்டு வந்து, தேசியக் கட்சிகள் என்போரை முறத்தால் விரட்டிய மாநிலம்.

தமிழகம் தான் மாநிலம் என்பதை நாடு (தமிழ்நாடு) பெயர் சூட்டிக் கொண்ட மாநிலம்.

தமிழகம் தான் தலைநகருக்கு இணையாக அயல்நாட்டுத் தூதரகங்களைக் கொண்ட மாநிலம்.

தமிழகம் தான் தன் மண்ணின் மொழியை (தமிழ்) அயல் நாடுகளிலும் ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலம்.

தமிழகம் தான் மண்ணின் மொழிக்கு சங்கம் வைத்தும், இன்றைக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகம் வைத்தும், தாய்மொழியும் தாய் மொழி அடிப்படை கல்வியையும் பேணிக் கொண்டிருக்கிற மாநிலம்.

தமிழகம் தான் கூகுள் தேடு பொறியில் இந்திய மொழிகளில் மண்ணின் மொழி தமிழை முதன்மைப் படுத்தியிருக்கிற மாநிலம்.

தமிழகம் தான் மற்ற மாநிலங்கள் எல்லாம் இந்தியாவை ஆரியர் சூட்டிய பெயரில் பாரதம் என்றழைக்கிற போது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாவலந்தேயம் என்பதன் மருவலான, உலகம் முழுவதும் அறிந்திருக்கிற இந்தியா என்ற பெயரில் அழைக்கிற மாநிலம்.

  • தமிழகம் தான் பொது விநியோகத்திட்டமான குடும்ப அடையாள அட்டை பொருள் விநியோகத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலங்களில் முதனமை மாநிலம். தி.மு.க., அ.தி.மு.க. என ஆட்சி மாறினாலும், இந்தக் காட்சி மட்டும் மாறாமலே இருந்தது. தற்போது இந்தப் பாதையிலிருந்து தமிழகம் திசைமாறத் தொடங்கியிருக்கிறது. நடுவண் அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட அறிவிப்பைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதன் மூலம், ‘மாதம் 8,333 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள குடும்பத்திற்கு இனி குடும்ப அட்டைப் பொருள்கள் கிடைக்காதுஎன்ற அச்சத்தை, மக்களிடம் விதைத்த தமிழக அரசு, இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

தமிழகத்தில் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் ஏற்றால் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது.

செயலலிதா இருந்தவரை இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தே வந்தார். ஆனால், செயலலிதா மறைவுக்குப் பின்னர், எந்தக் கேள்வியும் இல்லாமல் அ.தி.மு.க. அரசு உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தியது.

மறுபுறம், மற்றுமொரு தாக்குதலாக சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்வதாக அறிவித்தது நடுவண் அரசு. தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தை, கடுமையாகப் பாதிக்கும் இந்த அறிவிப்புக்குத் தமிழக அரசு அழுத்தமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. இதனால் மானிய ரத்து அமலானது. ‘சர்க்கரைக்கான நடுவண் அரசின் மானியம் ரத்தானாலும் சர்க்கரை விலையை உயர்த்தப்போவதில்லைஎன அப்போது அமைச்சர்கள் சொன்னார்கள்.

ஆனால், அதை மீறி இப்போது சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, வரும் மாதம் முதல் சர்க்கரை விலை ரூ.13.50 -ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ், அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சம் 2 கிலோ சர்க்கரையும், சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ சர்க்கரையும், கிலோ ரூ.13.50 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 37 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கான மானியத்தொகையை நடுவண் அரசு வழங்கி வந்தது.

அதாவது ஒருகிலோ சர்க்கரைக்கு 18.50 காசுகள் வீதம், 10,800 மெட்ரிக் டன் சர்க்கரைக்கு ஆண்டுக்கு 240 கோடி ரூபாய் மானியமாக வழங்கி வந்தது. இந்த மானியத்தை- சரக்கு மற்றும்சேவை வரி மூலம் தமிழக மக்களின் வருமானத்தைச் சுரண்டும் நடுவண் அரசு நிறுத்தியது. இதையடுத்து தற்போது சர்க்கரை விலையை ரூ.13.50-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.

இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாவர்கள். தமிழகத்தில் 1.98 கோடி குடும்ப அடையாள அட்டைகள் உள்ளன.

90 விழுக்காடு மக்களைப் பாதிக்கும் ஒரு விலை உயர்வைச் சர்வசாதாரணமாக அறிவித்து விட்டு, ‘இது யாரையும் பாதிக்காது. 9 விழுக்காடு பேருக்கு பழைய விலையிலேயே சர்க்கரை வழங்குகிறோம்என்ற பெருமையாக அறிவிக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை எதிர்த்து, சர்க்கரை மானியம் ரத்தை எதிர்த்தும் நடுவண் அரசுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியிருக்க வேண்டிய தமிழக அரசு, நடுவண் அரசை எதிர்த்து எதுவும் பேசாமல், நடுவண் அரசிடம் எதையும் கேட்காமல் ஏழை எளிய மக்கள்மீது போர் தொடுப்பது என்பது சரியானதல்ல.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.