Show all

தமிழர்களின் வரலாற்றுப்பெருமைகளை மூடி மறைக்கும் ஆளும் பாஜகவிற்கு எதிரான போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு நடைபெற்று வருகிறது.

நடுவண், மாநில அரசுகள் கீழடி ஆய்வினை தொடர்ந்து மேற்கொள்ள வலியுறுத்தி அங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப.வீரபாண்டியன் மேலும் கூறியதாவது,

கீழடி அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற நடுவண், மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை மூடி மறைக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. காணவே இயலாத சரஸ்வதி ஆற்றைத் தேடுகிறார்கள். ஆனால் கண் முன்னே இருக்கின்ற கீழடி அகழாய்வை மூடுவதற்கு முயற்சி மேற்கொள்கிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகளாக வரலாற்றுப்பாடத்தில் ஒரே பாடத்திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அதனை மறு சீரமைப்புச் செய்து கீழடி அகழாய்வு தகவல்கள் வரலாற்றுப் பாடங்களில் இடம் பெறும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக கீழடி அகழாய்வு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டு, புதிதாய்க் கிடைத்த தொல்லியல் சின்னங்கள் குறித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார். அங்கு நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.