Show all

40ஆயிரம் மின்இணைப்பு பெட்டிகளை மீண்டும் சரிபார்த்து, மூடிவைக்க அமைச்சர்தங்கமணி ஆணை

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கொடுங்கையூரில் மின்கசிவு காரணமாக பாவனா அகவை7, யுவஸ்ரீ அகவை9 என்ற இரு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.

     இந்தத் தகவல் அறிந்த மின்சாரதுறை அமைச்சர் பி.தங்கமணி, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமிகள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். மின்வாரியம் சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

     இதையொட்டி எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:-

மழை காலம் தொடங்குவதற்கு முன்பே மின்வாரிய அதிகாரிகளை அழைத்து திறந்து கிடக்கும் மின் சாதன பெட்டிகளை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தேன்.

     அதுமட்டுமல்ல தாழ்வான பகுதியில் உள்ள மின்சார பெட்டிகளை உயர்த்தி மேடான இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் உத்தர விட்டு இருந்தேன். இதனை அனைத்து பகுதிகளுக்கும் சென்று கண்காணித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கூறினேன்.

     சென்னையில் 40 ஆயிரம் மின்சார பெட்டிகள் உள்ளன. இவை பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவை அனைத்தையும் மீண்டும் சரிபார்த்து, திறந்து கிடக்கும் பெட்டிகளை மூடி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மின்கம்பிகள் வெளியே தொங்கிக் கொண்டு இருந்தால் அதை சரிப்படுத்தும்படி மீண்டும் அறிவுறுத்தி உள்ளேன்.

இதற்காக 5 குழு அமைக்கப்பட்டு பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

     மழை நீர் தேங்கி இருக்கும் விவரத்தை அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். எனது வீட்டு தொலைபேசிக்கும் தகவல் தரலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.