Show all

புதியபார்வை நடராசன் மீதான சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெக்சஸ் வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார், சசிகலாவின் கணவர் நடராஜன். புதிய காரை, ஏற்கனவே பயன்படுத்திய வாகனம் என கூறி இறக்குமதி செய்ததன் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை வரி மோசடி செய்ததாக நடராஜன் உள்பட நான்கு பேருக்கு எதிராக நடுவண் புலனாய்வுத் துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நடுவண் புலனாய்வுத் துறை வழக்கு மன்றம், நடராஜன் உள்பட நால்வருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5112 ஆண்டு (2010) தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் உள்பட நால்வரும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில் விசாரணை வழக்குமன்றம் தங்களின் தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்காமல் சிறை தண்டனை விதித்துள்ளதாகவும், எனவே விசாரணை வழக்குமன்றம் விதித்த சிறை தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ஜி.ஜெயசந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சார்பில் அணியமான வழக்கறிஞர்கள் கார் இறக்குமதியில் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றியே செயல்பட்டதாகவும் வரி ஏய்ப்பு என்கின்ற தங்கள் தரப்பினர் மீதான குற்றச்சாட்டு தவறானது. எனவே விசாரணை வழக்குமன்றம் விதித்த சிறை தண்டனை ரத்து செய்ய வேண்டும் மனுதரார்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிட்டனர்.

நடுவண் புலனாய்வுத் துறை தரப்பில் அணியமான வழக்கறிஞர் புதிய காரை, பயன்படுத்திய கார் என கூறி இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு விசாரணை வழக்குமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு அறங்கூற்றுவர் ஜெயசந்திரன் வழக்கின் தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.