Show all

திமுகவின் அரசியல் வரலாற்றில் கருணாநிதி இல்லாமல் கூடிய முதல் பொதுக்குழு கூட்டம்

திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கருணாநிதி இல்லாத பொதுக்குழு கூட்டமாக கூடியுள்ளது.

அண்ணாவிற்கு பிறகு திமுகவைக் கட்டிப்பாதுகாத்த கலைஞர் கருணாநிதி பங்குபெறாமல் முதல் முறையாக திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. கடந்த 48 ஆண்டுகளில் கருணாநிதி கலந்து கொள்ளாத முதல் பொதுக்குழு இதுவேயாகும்.

     1949ஆம் ஆண்டு திகவில் இருந்து திமுக பிரிந்து தனியாக தொடங்கப்பட்ட போது கருணாநிதிக்கு அகவை 25. அன்று முதல் இன்று வரை கடந்த 68 ஆண்டுகள் திமுகவின் முதுகெலும்பாக இருந்து வழிநடத்திவருகிறார்.

     1969ஆம் ஆண்டு திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்ட கருணாநிதி கடந்த 48 ஆண்டுகளாக பொதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று நடக்கும் பொதுக்குழுவில் கருணாநிதியால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

     திமுக பொதுக்குழு இன்று காலை, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 4 ஆயிரம் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

     8 மணிக்கு காலை உணவு முடித்து விட்டு அனைவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தனர். மேடையில் யாரும் ஸ்டாலினுக்கு சால்வை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

 

 

     பொதுக்குழுவில் பேராசிரியர் தீர்மானம் வாசித்ததும், எதிர்பார்த்தது போல செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் அதனை வழி மொழிந்தார். அன்பழகன் அந்தத் தீர்மானத்தை வாசித்த போது திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகமாக கை தட்டி வரவேற்பு அளித்தனர்.

     உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையிலிருந்து வந்தபிறகும் கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கை சுவாசத்துக்காக போடப்பட்ட குழாய் இன்னும் அப்படியே இருக்கிறதாம். எனவே திமுகவின் தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டு 48 ஆண்டுகளில் முதன் முறையாக அவர் இல்லாமல் பொதுக்குழு கூடியது.

     கருணாநிதியை சக்கரநாற்காலியில் உட்காரவைத்து பொதுக்குழு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்றுதான் முதலில் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்றால் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் பொதுக்குழுவுக்கு கருணாநிதி வரவில்லை என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.