Show all

பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும்: பழ.நெடுமாறன்

பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும்: பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்க நிறுவனத்தலைவர் பழ.நெடுமாறன் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை சந்திக்க இன்று அவினாசி சென்றார். முன்னதாக அவர் கோவையில் நிருபர்களிடம்  பேசியபோது,

 

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவத்தலைவர் கன்னையகுமார் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பா.ஜனதாவினர் விசாரணை அதிகாரி, நீதிபதி, வழக்கறிஞர்கள் முன்பு அவரைத் தாக்கினர். உச்சநீதி மன்றம் மாணவர் கன்னையகுமாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அவரை தாக்கி இருப்பது பா.ஜனதாவின் பாசிச முகம் அம்பலப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

 

அத்திக்கடவு-அவினாசி திட்ட பிரச்சினையில் பவானி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் 30 டி.எம்.சி. வீணாக கடலில் கலக்கிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன. நிலத்தடி நீரும் 1000 அடி வரை வறண்டு விட்டன.

அவினாசி-அத்திக்கடவு திட்டதை நிறைவேற்றினால் 50 அடி அழத்தில் நீர் கிடைக்கும். 500 கிலோ வாட் மின்சாரமும் நமக்கு கிடைக்கும். காமராஜர் ஆட்சிகாலத்தில் ரூ.120 கோடியில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தபோது இத்திட்டத்தை கைவிட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறுகிறார்கள். அவினாசி-அத்திக்கடவு திட்டதை எந்த அரசு வந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்.

 

உயர்நிலைக்குழு மத்திய அரசு பள்ளியில் மும்மொழி கொள்கை பரிந்துரை செய்துள்ளது. இந்தியை எதிர்த்துப் போராடிய தமிழகத்தில் சமஸ்கிருத மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த மொழியால் எந்த நன்மையும் கிடைக்காது. மாணவர்களுக்கு கூடுதல் சுமைதான் ஏற்படும். எதிர்ப்பையும் மீறி நடைமுறைப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும். டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா, ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிபிரசாத் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணமாகும் என்றார்.

 

அவர் மேலும்,  கடந்த முறை இலங்கை தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதே நிலைமையைதான் இந்த கட்சிகள் சந்திக்கும்.

 

வெளிநாடு வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் கூறும் போது இலங்கை அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்றும் அறிவிக்கவில்லை. இறந்து விட்டார் என்றால் இந்திய சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும். அதற்காக இந்திய அரசு அதனை மறைத்து வருகிறது என்று கூறியுள்ளார். பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.