Show all

அத்திக்கடவு-அவினாசி திட்டத் தொடக்கப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

மக்கள் போராட்டம் வெற்றி!

அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள நிலை அறிக்கையில்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டமானது ஆண்டிற்கு சராசரி 600 மிமீ முதல் 700 மிமீ வரையிலான குறைந்த மழைப்பொழிவைப் பெற்றுவரும் ஒரு வறண்ட பகுதி ஆகும். இந்த வட்டத்தின் ஒரு பகுதியில் பவானி ஆறு சென்றாலும், இதன் பிற பகுதிகளுக்கு இவ்வாற்றின் நீர் சென்று பயனடையும் வழி வகைகள் ஏதும் இதுவரை இல்லை.   மேலும், அவினாசி தவிர பிற வறண்ட பகுதிகளான அன்னூர், திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதியில் வசிக்கும் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதாலும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்ட காரணத்தாலும், பவானி ஆற்றின் உபரிநீரை இப்பகுதிகளுக்கு திருப்பி, குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர் வழங்குவதன் மூலம், பாசன வசதி    அளித்திட நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

 

இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்,  பில்லூர் அணையிலிருந்து, அத்திக்கடவு என்ற இடத்தில் ஒரு கால்வாய் அமைத்து, மேற்கண்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில்,

‘அத்திக்கடவு-அவிநாசி கால்வாய் திட்டம’ என்ற திட்டம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  

இத்திட்டத்தில், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 31 பொதுப் பணித்துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர்  நிலைகள் ஆகிய வற்றை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதுடன் பாசனத்தையும் மேம்படுத்திட உத்தேசிக்கப்பட்டது.

 

பேராசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர் குழு, அத்திக்கடவு - அவிநாசி கால்வாய் திட்டத்தினை ஆய்வு செய்து, பவானி ஆற்றில் உபரிநீர் ஏற்படும் காலங்களில், ஆண்டு ஒன்றுக்கு 2 டிஎம்சி நீரினை கால்வாய் மூலம் திருப்புவதற்கு சாத்தியக்கூறு உள்ளது எனவும், பவானிசாகர் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறும் நிலையில், உபரி நீரை பில்லூர் அணையின் நீர்பரப்பு பகுதியில் இருந்து திருப்பி விடலாம் எனவும், இது தொடர்பாக விரிவான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.        

 

இப்பரிந்துரையை ஏற்று, இத்திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நவம்பர் 2011ல் அரசாணை வழங்கப்பட்டது.  இதன்படி அத்திக்கடவு-அவிநாசி கால்வாய் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, 2011-12 விலைவிகிதப்படி, 1862 கோடி ரூபாய்க்கு நடுவண் அரசின் வௌ;ள மேலாண்மை திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி தயாரிக்கப்பட்டது.  இத்திட்டத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு பவானிசாகர் அணையின் மேற்புறத்திலுள்ள பில்லூர் அணையிலிருந்து, பவானி ஆற்றின் உபரி நீரினை திருப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டது.  

 

மேற்கண்ட திட்ட அறிக்கையானது, நடுவண் அரசின் வௌ;ள மேலாண்மை திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்காக ஏப்ரல் 2013-ல் அனுப்பப்பட்டது. இத்திட்டம் வௌ;ள மேலாண்மை திட்டத்தின் வழிக்காட்டுதல்களின்படி அமைய வாய்ப்பில்லை என மத்திய நீர்க்குழுமம் தெரிவித்தது. எனினும், பவானி வடிநிலத்திலுள்ள பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்துவதன் மூலம் சேமிக்கப்படும் நீரை பயன்படுத்தி, இத்திட்டத்தை பாசனத் திட்டமாக மாற்றி அமைக்கலாம் என நவம்பர் 2013ல் தெரிவித்தது. 

 

பவானி வடிநில பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்துவது அவசியம் எனக்கருதியதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களது ஆணைப்படி பவானி வடிநிலத்தில் அமைந்துள்ள காளிங்கராயன் வாய்க்காலின் தலைப்பகுதிகள் 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2014ல் முடிக்கப்பட்டன.

 

இதைத்தவிர, தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களின்  தலைப் பகுதிகளில் 40.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2015ல் முடிக்கப்பட்டன. மேலும், பவானி வடிநிலத்தில் பிற பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்திட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று,  தமிழக முதலமைச்சர், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக அத்திக்கடவு-அவிநாசித் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை உடனடியாக துவக்கிடவும் மற்றும் திருத்திய கருத்துருவினை நடுவண அரசுக்கு அனுப்பிடவும்  ஆணையிட்டுள்ளார். மேலும் இது குறித்து, இடைக்கால நிதிநிலை அறிக்கை 2016-2017ல் அறிவிக்கப் பட்டுள்ளது.

 

இத்திட்டத்திற்கான தொடக்கநிலைப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமித்து, நடுவண் அரசின் வனத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகங்களின் ஒப்புதலை அவற்றின் மூலம் பெறுதல், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு கள ஆய்வு மேற்கொண்டு மற்றும் ஆவணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்காக 3 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தலைமைப் பொறியாளர், நீர் வள ஆதாரத்துறை (திட்டஉருவாக்கம்), அத்திக் கடவு -அவிநாசி திட்டத்தை பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டத்திற்கான திட்ட மதிப்பீட்டினை தயாரித்து, அரசுக்கு அளிக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளார்

என்று கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.