Show all

தமிழக அரசு கலைப்பு! உண்மையா? விருப்பத்தின் வெளிப்பாடா

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு எதிர்வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை கலைக்கப் படவிருப்பதாக அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியான செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். மற்றும் தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி போன்றவை சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. அந்த நாளிதழில் இன்று வெளியான ஒரு செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசு கலைப்பா? என்ற தலைப்பில் அந்த நாளிதழில் இன்று வெளியான செய்தியில், எடப்பாடி அரசு எதிர்வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை கலைக்கப் பட்டு, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரவிருப்பதாகத் தெரிகிறது. பழனி, பன்னீர் உள்ளிட்ட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

அமைச்சர்களின் பினாமி சொத்து உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆளுநர் வசம் உள்ளது.

இதேபோல கடந்த 16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5077ல் (31.01.1976) ஆட்சியை இரவோடு இரவாகக் கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடவடிக்கை எடுத்தார். அப்போது ஆளுநரின் ஆலோசர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், பி.கே. தவே போன்ற மூத்த ஆட்சிப்பணித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல், தற்போதும் ஆளுநரின் ஆலோசகர்களாக ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஆட்சிப்பணித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதையறிந்த ஆளும் தரப்பினர் ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியை எப்படிக் கையாளுவது என்ற அதிர்ச்சியில் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,613

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.