Show all

ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை

ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டையில் செகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

     ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ பலியானார். சரோன் என்ற மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.

     மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும், மீனவர் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     அடிக்கடி செகதாப்பட்டின மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களும் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     மீனவர் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்ட துயர சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல இடங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

     இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால், இலங்கை சிறையில் உள்ள 85 மீனவர்களும் வீடு திரும்புவார்களா என்ற அச்சத்தில் மீனவ குடும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எப்போது நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியை மீனவர்கள் எழுப்பி வருகின்றனர்.

     தமிழக மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நடுவண் அரசு தொடர்ந்து பாராமுகம் காட்டுவதை உறுதி படுத்துவதை போல உள்ளது சுஷ்மா சுவராஜ் நடவடிக்கைகள்.

     எதற்கெல்லாமோ கருத்து கூறி வந்த சுஷ்மா சுவராஜ் இந்திய கடல் எல்லையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்காமல் உள்ளார்.

     அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஹர்னிஷ் பட்டேல், அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டது தனக்கு மிகுந்த வலியை தந்துள்ளதாகப் புலம்பியவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

     வாஷிங்டன் மாகாணம், கென்ட் நகரைச் சேர்ந்த தீப் ராய் தனது வீட்டில் காரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த வௌ;ளையின இளைஞர் ஒருவர்,

துப்பாக்கியால் தீப் ராயை சுட்டார்.

அப்போது, சுஷ்மா, இந்திய வம்சாவளியை சேர்ந்த தீப் ராய் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. தீப் ராய் தந்தையான சர்தார் ஹர்பால் சிங்கிடம் இதுகுறித்து பேசியுள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார்.

     இப்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டபோது கூட பொங்கி எழுந்து, உறவுக்காரர்களுக்கு ஆறுதல் கூறும் சுஷ்மா சுவராஜ்,

     கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட்டதில் இறந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்ஜோ மரணம் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை; ஆறுதல் கருத்தும் இல்லை.

     வெளிநாட்டில் நடைபெறும் சம்பவங்களுக்கே துணை நிற்கும் சுஷ்மா, உள்நாட்டு எல்லைக்குள் நடந்த தாக்குதல் குறித்து கண்டனம் வேண்டாம் ஆறுதலாக ஒரு கருத்து கூடவா தெரிவிக்க மனமின்றி போய்விட்டது?

     கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றபோது, இத்தாலி கடற்படையினர் எப்படி நடத்தப்பட்டனர் என்பதை உலகம் மறந்திருக்காது.

     இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும், போது மட்டும் நடுவண் அரசு ஊமையாகிப் போவது ஏன்?

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.