Show all

இவ்வளவு விரைவாக, இத்தனைக் காட்சிகளா! ஒரு அறங்கூற்றுமன்றத்தில் பிணை மற்றதில் தடை அதில் புறக்கணிப்பு இதில் வழக்கு

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை சேத்துப்பட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வழக்கறிஞர் சுனந்தா மீது, அந்த வழியே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுனந்தா. 

பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் கல்லூரி மாணவர்கள் மதன், கரண் ஆகிய இருவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது. 

இவர்கள் இருவரையும் பாண்டிபஜார் போக்குவரத்து காவலர்கள் கைது செய்து, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

வெள்ளிக் கிழமையன்று கரண் மற்றும் மதனுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது சென்னை சைதாப்பேட்டை முதன்மை அமர்வு அறங்கூற்றுமன்றம்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டும் என, வழக்கறிஞர் சுனந்தாவின் கணவர் சுரேந்தர் நாயர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தார். சனிக்கிழமையன்று இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் கிருஷ்ணன் ராமசாமி, இரு மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். உயர் அறங்கூற்றுமன்றம் தடை விதித்தது குறித்து சைதாப்பேட்டை 14ஆவது அறங்கூற்றமன்ற நடுவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரையும் பிணையில் விடுதலை செய்தது சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்றம்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை அறங்கூற்றுவருக்கு எதிராக சுரேந்தர் நாயர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இன்று வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரணை செய்தது அறங்கூற்றுவர்கள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆசா அடங்கிய அமர்வு. சைதாப்பேட்டை 14ஆவது அறங்கூற்றுமன்ற நடுவர் மற்றும் சைதாப்பேட்டை கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு நேரில் அணியமாக வேண்டுமென்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர் அறங்கூற்றுவர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,014.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.