Show all

சீமான் காட்டம்! இயல்புக்கு மாறான ஆறாவது விரல்தான் ஆளுநர்

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. இயங்கலை சூதாட்ட விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். நமது தமிழ்நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் சீமான், வழக்கமான காட்டத்தோடு 

20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மிக விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரஇருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி தொடர்பாக கலந்துரையாடல்களைத் தொடங்கிவிட்டன. 

இந்த நிலையில் இன்று 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார் சீமான். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது உருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, வழக்கம்போல் பாஜகவை வெளுத்தெடுத்தார். 

சீமானின் பாஜக வெளுப்பில், வாக்குக்காக மட்டுமே அம்பேத்கரை பற்றி பாஜக பேசிட்டு இருக்காங்க. அம்பேத்கர் இன்னைக்குத்தான் அவங்க கண்ணுக்கு தெரிகிறார். வல்லபாய் படேலுக்கு ஏன் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைச்சாங்க? நாட்டின் பெருமை காந்தியா? அம்பேத்கரா? வல்லபாய் படேலா? இந்தியாவுக்கு நெருக்கமாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் கூட வல்லபாய் படேலை தெரியாது. அப்பறம் எதுக்கு இப்படி ஒரு சிலை? 

உழைப்பில் இருந்து நுட்பமாக தமிழர்களை வெளியேற்றி விட்டனர். அதற்கு மாற்றாக அந்த உழைப்புக்கு வட இந்தியர்கள் வருகிறார்கள். கிராமங்களில் வட இந்தியர்கள் நாத்து நடுகிறார்கள். கரும்பு வெட்டுகிறார்கள். எல்லா இடத்திலும் அவங்களே இருக்காங்க. இப்போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து விட்டால் இந்த நிலத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் வட மாநிலத்தவர்களே தீர்மானிப்பார்கள். அப்போது நாங்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமைகளாகிவிடுவோம். இலங்கையில் நடந்துச்சே, அதுதான், இனி இங்கேயும் நடக்கும். அதுக்குள்ளே தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். 

குஜராத் தேர்தல் வாக்குப் பதிவின்போது, ஒரே ஆள் மொத்த வாக்கையும் பதிவு செய்கிறார். இது குறித்த காணொளி இருக்கிறது. இதையெல்லாம் வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படி வெற்றி பெறுவதற்கு பதில், நஞ்சைக் குடிச்சிட்டு சாகலாம். பாஜக 8 முறை இல்லை, 80 வது முறை வென்றாலும் அது இழிவின் முன்னெடுப்பே. 

கருணாநிதி, எம்ஜிஆர், செயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது ஆளுநர் என்பவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவே தெரியாது. அப்போது ஆளுநர் சட்டமன்றத்தில் மட்டும் பேசி விட்டு போவார். இப்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. இயங்கலை சூதாட்ட விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர்... இந்த தமிழ்நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை என்றார் வழக்கமான காட்டத்தோடு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,454.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.