Show all

ஆறுபேர்களைப் பலிகொண்ட கழிவுநீர்த் தொட்டி! தந்தை-மகன்கள் பலியான பரிதாபம்

திருப்பெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை தூய்மைப் படுத்தும் போது நேர்ந்த சோகம், கழிவுநீர்த்தொட்டியில் உற்பத்தியாகியிருந்த மீத்தேன் நச்சு வாயு தாக்கி தந்தை-மகன்கள் ஆறு பேர்கள் பலியாகினர். 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விநாயகா நகர் நெமிலி முதன்மைச்சாலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி அகவை 53. இவர் தனது வீட்டின் மாடியில் 10 அறைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். வீட்டின் தரைத்தளத்தின் முன்பகுதியில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்த கழிவுநீரை அகற்ற வழக்கம் போல கிருஷ்ணமூர்த்தி தனியார் வாகனம் வரவழைத்துள்ளார்.

கழிவுநீரை வாகனத்தினர் உறிஞ்சி எடுத்து விட்டனர். வாகனத்தினர் முழுமையாக கழிவு நீரை எடுத்திருப்பார்களா என்ற ஐயப்பாட்டில், தன் வீட்டில் குடியிருக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரதாபாய் அகவை28 என்பவரை கழிவுநீர் முழுவதும் அகற்றப்பட்டு விட்டதா? என பார்க்கும்படி கிருஷ்ணமூர்த்தி கூறினார். இதையடுத்து சுரதாபாய் கழிவுநீர் தொட்டிக்குள் எட்டிப்பார்க்க முயற்சித்த போது, கழிவுநீர்த் தொட்டியில் உற்பத்தியாகியிருந்த மீத்தேன் நச்சு வாயுவால் மயக்கமுற்று தொட்டிக்குள் விழுந்தார். 

தாதபாய் மேலே வர முயற்சிக்காத நிலையில், கிருஷ்ணமூர்த்தி கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் மீத்தேன் நச்சு வாயுவால் மயக்கமுற்று தொட்டிக்குள் விழுந்தார். கணவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையே என சந்தேகம் அடைந்த லதா, தனது மகன்களிடம் இதுகுறித்து கூறினார்.

உடனே கண்ணன், கார்த்தி ஆகியோர் அடுத்தடுத்து கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் மீத்தேன் நச்சு வாயுவால் மயக்கமுற்று உள்ளே விழுந்தனர். லதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டில் குடியிருக்கும் பரமசிவம் அகவை 28 என்பவர் கழிவுநீர் தொட்டியில் இறங்கினார். அவரும் தொட்டிக்குள் விழுந்தார்.

இதையடுத்து அந்த வழியாக வந்த கியாஸ் ஏஜென்சி ஊழியர் லட்சுமிகாந்தன் அகவை 22 உதவிக்கு ஓடிவந்தார். கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய அவரும் மயங்கி உள்ளே விழுந்தார்.

உடனே இதுகுறித்து திருப்பெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல்துறையினருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியின் உள்ளே தண்ணீரை பாய்ச்சி நச்சுவாயுவைக் கலைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கிப் பார்த்தனர்.

அங்கு கிருஷ்ணமூர்த்தி உள்பட 6 பேரும் நச்சுவாயு தாக்கி இறந்து கிடந்தனர். அவர்களின் உடலை கயிறு கட்டி மேலே எடுத்து வந்தனர். மீட்கப்பட்ட உடல்களை காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.