Show all

தமிழகத்தின் மாநிலமரம் பனையைக் காக்க அரசுக்கு கவனஅறிக்கை! உயர்அறங்கூற்றுமன்றம் மதுரைக்கிளை நடவடிக்கை

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் சித்தார்த், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாகும். சுமார் 150 ஆண்டு முதல் 180 ஆண்டுகள் வரை வாழ்ந்து பலன் தரக்கூடியது பனைமரம். தமிழகத்தில் சுமார் எட்டரை கோடி பனைமரங்கள் இருந்தன. தற்போது சுமார் இரண்டரை கோடிக்கும் குறைவாகவே உள்ளன. செங்கல்சூளை மற்றும் தொழிற்சாலைகளுக்காக அதிகளவு பனைமரங்கள் அழிக்கப்பட்டன. இதனால், பனைமரத்தை பாதுகாக்கும் விதமாக பனை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி பனை வாரியமும் அமைக்கப்பட்டது. ஆனால், பனை பொருட்களுக்கு மட்டுமே முதன்மைத்துவம் கொடுக்கப்படுகிறதே தவிர பனை மரத்தை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது பனை மரத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பனை மரம் முழுமையாக பயன்தரக்கூடியது. இதனால், பனைமரத்தை பாதுகாப்பதற்காக சட்டம் மற்றும் வாரியம் கொண்டுவரப்பட்டதன் நோக்கமே சிதைகிறது. எனவே, அறங்கூற்றுமன்றம் தலையிட்டு பனை மரத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பனைவிதைகளை ஆங்காங்கே நடவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவை நேற்று விசாரித்த அறங்கூற்றுவர்கள் டி.ராஜா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் மனு குறித்து பனை பொருட்கள் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு வாரியம், வனத்துறையின் நடவு கழக தலைவர் உள்ளிட்டோருக்கு கவனஅறிக்கை அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 கிழமைகள் தள்ளி வைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,932.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.