Show all

நீதிமன்றத்தில் ஆஜராக மதுரை வந்தார் சசிகலா புஷ்பா; காவல் துறையினர் குவிப்பால் பரபரப்பு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக, சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர் இன்று மதுரை வந்துள்ளார். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி என்ற இருவரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.அன்னத்தாயின் ஆட்சேப மனுவை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பா மனுவை நிராகரித்ததோடு, வரும் இன்று (29-ம் தேதி) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், சசிகலா புஷ்பாவை 6 வாரத்துக்கு கைது செய்ய தடையும் விதித்துள்ளது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர், வெகுநாட்களுக்கு பின் இன்று தமிழகம் திரும்பி உள்ளார். சிங்கப்பூரில் இருந்து 28:08:16 நள்ளிரவு 12:25 மணிக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த சசிகலா புஷ்பா, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீதிமன்றம் அழைத்திருப்பதால் மரியாதை கொடுத்து ஆஜராக குடும்பத்துடன் வந்து உள்ளேன். இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. டெல்லி நீதிமன்றம், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் சேர முடியாது என்பது சட்டம். வேறு கட்சியில் சேருவது பற்றி இப்போது பேச வேண்டாம். எனது நடவடிக்கைகளை போக போக பொறுந்திருந்து பாருங்கள். பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு வேண்டும், மரியாதை வேண்டும். நீங்கள் (ஊடகம்) பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தான், நான் இங்கு வந்தேன். நீங்கள் சரியாக செய்ததால் தான் நான் இங்கு நடமாட முடிந்தது. உங்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள், கலங்கப்படுத்தாதீர்கள். அது சுவாதியாக இருக்கட்டும், விஷ்ணு பிரியாவாகட்டும் யாரையும் களங்கப்படுத்தீர்கள். விஷ்ணு பிரியா என்னுடன் ஜ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்த பெண். பெண்களைக் கவுரப்படுத்தி மரியாதையுடன் அரசாங்க பணியை செய்ய வழிவிட வேண்டும். நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. கட்சியோ, இயக்கங்களோ, தலைவர்களோ தானாக இயங்க வேண்டும். சூரியன் தானாக இயங்குகிறது. பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என் போன்ற பெண்களுக்கும் சரி. இதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.