Show all

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதா

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தும் முறையை கைவிட்டு, மன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது. நகர்பாலிகா சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல்கள் தான் நடத்தப்பட்டு வந்தன. 2006 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பேரூராட்சித் தலைவர் முதல் மாநகராட்சி மேயர் வரை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டது. அதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, 2011 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பேரூராட்சித் தலைவர் முதல் மேயர் வரையிலான நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில் இப்போது அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத் தக்கதாகும். முதலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு மட்டும் மறைமுகத் தேர்தல் நடத்த தீர்மானித்த தமிழக அரசு அதற்கான சட்டத்திருத்த முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அப்போது, மாநகராட்சிகளில் மேயருக்கு போதிய ஆதரவு இல்லாவிட்டால், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது என்பதால் தான், மாநகராட்சி உறுப்பினர்களே மேயரை தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக அதிமுக அரசால் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்போது நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியவற்றுக்கும் மறைமுகத் தேர்தலை கொண்டு வந்துள்ள தமிழக அரசு, உள்ளாட்சித் தலைவர்கள் தேர்வு முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக விளக்கமளித்திருக்கிறது. ஒரே மாதிரியாக இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் தேர்தல் முறையை, மேயர் தேர்தலில் மாற்றம் செய்ததன் மூலம் தமிழக அரசு தான் சிதைத்தது. இப்போது அதையே காரணம் காட்டி மற்ற தேர்தல் முறைகளிலும் மாற்றம் செய்வதை ஏற்க முடியாது. உள்ளாட்சித் தலைவர்கள் தேர்தல் முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்பினால், அனைத்து உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கும் நேரடித் தேர்தல் நடத்துவது தான் சரியானதாக இருக்கும். அதைவிடுத்து தங்கள் வசதிக்கேற்ப தேர்தல் முறையை அ.தி.மு.க அரசு மாற்றுவதை அனுமதிக்க முடியாது. மறைமுகத் தேர்தல் மூலம் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் எதிரணியிலுள்ள உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் கலாச்சாரம் பெருகும். அது ஜனநாயகப் படுகொலைக்கும், ஊழலுக்கும் வழி வகுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அதுமட்டுமின்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் யாரைத் தலைவராக தேர்வு செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் வாக்களிக்கும் நிலைக்கு வாக்காளர்களை தள்ளுவது அவர்களுக்கு செய்யும் அவமதிப்பு ஆகும். உள்ளாட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் தான், வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக உள்ளாட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பதவிக்கு வந்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு முடிவை அரசு எடுத்திருக்கிறது. இது உள்ளாட்சி ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இப்போது நடைமுறையிலுள்ளவாறு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையே தொடர அரசு வகை செய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.