Show all

ரூ.52 லட்சம் வழங்க வேண்டியதாயிற்று! ரூ.19 லட்சம் இழப்பீடு மறுத்து மேல்முறையீடு செய்த காப்பீட்டு நிறுவனம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாலை விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு ரூ. 19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கீழ் அறங்கூற்றுமன்ற உத்தரவை எதிர்த்து உயர் அறங்கூற்றுமன்றத்துக்கு வந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு தகுந்த அடி கொடுக்கும் வகையில் ரூ. 52 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் சாலையோரம் சென்று கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கும் எட்டு அகவை சிறுமி மீது தனியார் பேருந்து ஏறிச் சென்றதில், அவர் தன் வலது காலை இழந்து விட்டார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்கும்படி, திருப்பூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து 19 லட்ச ரூபாயை வழங்கும் உத்தரவை பரிசீலிக்க கோரி ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு அறங்கூற்றுவர்கள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வாகன ஓட்டுனர்கள், கவனக் குறைவாக, வேகமாக, பொறுப்பில்லாமல் வாகனங்களை ஓட்டுவதால் இந்தியாவில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாக அறங்கூற்றுவர்கள் விசாரணையில் வேதனை தெரிவித்தனர்.

மேலும், காலை இழந்து வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, 19 லட்சம் ரூபாயில் இருந்து, 52 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட அறங்கூற்றுவர்கள், அத்தொகையை வட்டியுடன் சேர்த்து நான்கு கிழமை காலத்திற்குள் வைப்பு செய்ய காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

அறங்கூற்றுவர்கள் தங்கள் உத்தரவில், இந்த பணம், சிறுமிக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கி விடாது என வேதனை தெரிவித்தனர். ரூ.19 லட்சம் இழப்பீடு என்பதையே அதிகம் என மேல் முறையீட்டிற்கு வந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு மும்மடங்குக்கு ஈடான தொகையை வழங்க உத்தரவிட்டு உயர் அறங்கூற்று மன்றம் தகுந்த பாடம் கற்பித்துள்ளது.

முழுக்க முழுக்க இலாபத்தில் இயங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் நிறைய பேரை ஏமாற்றத்தான் செய்கின்றன. காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிய காப்பீடு பெறுவது இயற்;கையின் கொடையாகவே மக்களால் கருதப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.