Show all

இரா.கி.நகரில் போட்டியிட பதிகை செய்த 30 வேட்புமனுக்கள் நிராகரிப்பு; விஷாலின் வேட்புமனு நிறுத்திவைப்பு

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், தினகரன் ஆகியோருடன் 30 பேர் மட்டுமே மனு பதிகை செய்திருந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று மதியம் திடீரென புற்றீசல் போல சுயேட்சை வேட்பாளர்கள் படையெடுத்து வந்தனர். தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததால் சலசலப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களை உட்கார வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி ஏற்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் திரண்டதால் தேர்தல் அதிகாரிகளும், காவலர்களும் திணறினார்கள்.

வேட்புமனுக்கள் அனைத்தையும் வாங்கி முடிக்க இரவு 9.45 மணியாகி விட்டது. அதன்பிறகு மொத்தம் எத்தனை வேட்புமனுக்கள் பதிகை செய்யப்பட்டுள்ளன என்று கணக்கிடப்பட்டது. 145 வேட்பு மனுக்கள் பதிகை செய்யப்பட்டு இருப்பது இரவு 10 மணிக்கு தெரிய வந்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 115 வேட்புமனுக்கள் பதிகை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தது சாதனையாக கருதப்படுகிறது.

அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதம், விதமாக வந்து தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். கடைசி நிமிடத்தில் இவ்வளவு சுயேட்சைகள் வந்ததில் அரசியல் சூழ்ச்சி பின்னணியாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை திணற வைக்கவே சுயேட்சைகள் களம் இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டன.

விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.முகவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடிக்கிறது. அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை 30 வேட்பாளர்களின் மனு நிராகரிக்கபட்டு உள்ளன. இன்று பிற்பகல் 4 மணியுடன் மனுக்கள் பரிசீலனை நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியாக உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,627

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.