Show all

தவத்திரு குன்றக்குடி அடிகளார் போற்றி போற்றி! கொண்டாடுவோம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை

அன்றைக்கு ஆட்சியாளர்கள் கொண்டாடிய தனிப்பெரும் ஆதீன அரசராக விளங்கினார்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். ஒன்றிய பாஜக அரசு நியமித்த தமிழ்நாட்டு ஆளுநரை அழைத்து, ஆட்சியாளர்களைக் கொண்டாட வேண்டிய அவலத்தை தருமபுரம் ஆதினத்திற்கு இழுத்து விட்டிருக்கிறது பாஜகவின் தமிழ்நாட்டுக் கிளை. 
    
09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தவத்திரு குன்றக்குடி அடிகளார்- சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். குன்றக்குடி ஆதீனத்தின் மடத்தலைவராக இருந்தவர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவரின் உடன் பிறந்தோர் மூவர். இருவர் ஆண்கள். ஒருவர் பெண்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார், நான்காம் வகுப்பு பயிலும் போது- வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான ரா. பி. சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் சாளரத்தின் முன் நின்று அன்றாடம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் விபுலானந்த அடிகள் ஆவார்.

பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து இந்திய விடுதலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்பணியில் சேர்ந்தார். மூன்றாண்டு கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று புலவர் (வித்துவான்) ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.

இந்திய விடுதலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், (தவத்திரு குன்றக்குடி அடிகளார்) சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன குருபூசை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. 

கந்தசாமித் தம்பிரானின் (தவத்திரு குன்றக்குடி அடிகளார்) நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீன அரசர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார். அப்போது தெய்வசிகாமணி 'அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.

நாளது 21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5051 (5.09.1949) அன்று ஆதீன இளவரசராகிய அவர், நாளது 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5054 (16.07.1952) முதல் குன்றக்குடி ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். 

பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். 

திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த ஹிந்துத்துவாவிற்கு எதிர்வினை ஆற்றுகையான, நாத்திகம், பார்ப்பனிய தெய்வமறுப்பு, ஆகியன தமிழர் நிற்கவேண்டிய இறையியல் எது? என்கிற கேள்வியை தமிழர்கள் நெஞ்சத்து உதித்தது.

இந்த வினாவிற்கு விடைவழங்கும் பொருட்டு நாளது 27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5054 (11.08.1952) அன்று சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன் விளைவாகத் தோன்றியதே 'அருள்நெறித் திருக்கூட்டம்'.

பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழ்நாடு மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப் பிரிவாக 'அருள்நெறித் திருப்பணி மன்றம்' எனும் அமைப்பும் கிளைத்தது. அப்போதைய தமிழ்நாடு அரசின் துணையோடு தமிழ்நாடு 'தெய்வீகப் பேரவை' எனும் அமைப்பு, ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தருமை ஆதீனக் குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 46 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார்.

வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் 'குன்றக்குடி கிராமத்திட்டம்'.

பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, மணிமொழி, தமிழகம், அருளோசை முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் தொடங்கி, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் மக்கள் சிந்தனை, அறிக இயல்அறிவு (சயின்ஸ்) ஆகிய இதழ்களும் குறிப்பிடத்தக்கன.

தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது அவருக்கே வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இந்திய ஒன்றிய அரசின் இயல்அறிவு (சயின்ஸ்) செய்தி பரப்பும் ஒன்றியக்குழு, முப்பத்தியோர் ஆண்டுகளுக்கு முன்னம் ஒன்றிய விருது வழங்கிச் சிறப்பித்தது.

இவர் எழுதிய நூல்கள்:
அப்பர் விருந்து
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்
திருவாசகத்தேன்
தமிழமுது
சமய இலக்கியங்கள்
நாயன்மார் அடிச்சுவட்டில்
ஆலய சமுதாய மையங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது)
நமது நிலையில் சமயம் சமுதாயம்
திருவருட்சிந்தனை
அன்றாட தியான நூல்
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16 தொகுதிகள்
இலக்கியங்கள்
திருவள்ளுவர்
திருவள்ளுவர் காட்டும் அரசியல்
திருவள்ளுவர் காட்டும் அரசு
குறட்செல்வம்
வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை
திருக்குறள் பேசுகிறது
குறள்நூறு
சிலம்பு நெறி
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
பாரதி யுக சந்தி
பாரதிதாசனின் உலகம்
கவியரங்கில் அடிகளார் (கவிதைகள்)
மண்ணும் மனிதர்களும் (தன்வரலாறு)
அடிகளார் எழுதிய சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேறியுள்ளன. அவரது இறுதிக்காலத்தில் தினமணியில் எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் சமய - சமுதாய ஞானியாகப் பாராட்டப் பெறுகிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எதைச் சொன்னாலும் தெளிந்து சொல்வார் - தெளிவாகவும் சொல்வார். தவத்திரு அடிகளார் அவர்களின் எழுத்தும் சொல்லும், சிந்தனையும் செயலும் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டே அமையும்.  'நாம் காணும் சமய நெறி, சமுதாயத் தொடர்புடைய நெறி, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக - சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறது. அது; மனித சமுதாயத்தின் சிக்கல்கள் தொல்லைகள் அனைத்தையும் மாற்றியமைக்கின்ற பொறுப்பும் கடமையும் சமய நெறிக்கு இருக்கிறது' என்று கூறிச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு பெரும் இணைப்புப் பாலத்தை உருவாக்கும் பணியை அவர் இயன்ற வகையெல்லாம் செய்து வருகின்றார். சமயவாதிகளிடையேயும் சமுதாயவாதிகளிடையேயும் அவர் ஒரு புரட்சிச் சின்னமாகவே திகழ்கின்றார். அவர், சைவநெறி பரப்பும் திருமடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாலும் அவரிடத்துச் சமய வெறியையோ, பிறசமயக் காழ்ப்பினையோ காண இயலாது. என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அடிகளாரைப் பாராட்டி பெருமை பெற்றுள்ளார்கள்.

சமய உலகில் இருந்து கொண்டு சமுதாய நோக்கு நோக்குவதில் அடிகளார் தனித்திறம் வாய்ந்தவர். தந்தை பெரியார் அவர்களுடன் தனிப்பெரும் நட்புப் பூண்டு இவர் இருந்த நிலையே இதற்கு நல்ல விளக்கம் தரும். மாடதிபதியாக இருந்தாலும், மகேசுவரனைப் பற்றி எண்ணினாலும் இவருடைய சிந்தனைகள் மக்கட் சமுதாயத்தைச் சுற்றியே சுழல்வதனைக் காணலாம். இம்முறையில் இவர் ஒரு புதுமைத் துறவியாகப் - புரட்சித் துறவியாகக் காட்சியளிக்கின்றார். மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்தவும், இயல்பாய் குறையினின்று நீங்கி, நிறை நலம் பெறச் சமயம் துணை செய்கிறது என்றும், பல்வேறு சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறியே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குத் தகுந்த நெறி, அந்நெறியே தமிழர் சமய நெறி என்றும் கடவுள் தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை உடையோர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் சின்னங்களும், சடங்குகளும் மட்டுமே கடவுள் நெறிகள் ஆகா என்றும், மழை பொழிந்ததின் விளைவை மண் காட்டுவதைப் போல், சமயநெறி நின்று வாழ்வோரின் இயல்பினை வையகம் காட்ட வேண்டும் என்றும், விளைவுகள் காட்ட வேண்டும் என்றும், தமிழ்ச் சமயத்தில் தீண்டாமை இல்லையென்றும் 'ஒன்றே குலம்' என்றும் திருமூலர் ஆணையின்படி ஒரு குலம் அமைக்க வேண்டுமென்றும், மனித உள்ளங்கள் அருள் நெறிவழி இணைக்கப் பெறும் பொழுது மண்ணகம் விண்ணகம் ஆகும் என்றும், தவத்திரு அடிகளார் அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பது உணர்ந்து போற்றத்தக்கதாகும். என்று நெ.து. சுந்தரவடிவேலு, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் அவர்கள் அடிகளாரைப் பாராட்டி பெருமை கொண்டுள்ளார்கள்.

'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற குறிக் கோளை உள்ளத்தே கொண்டு துறவிக் கோலம் பூண்டு, தமிழ்த் தொண்டு ஆற்றிய சீரியோர் சிற்சிலர், பழங்காலந் தொட்டு செந்தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் காலத்தில், அத்தகைய தலைமுறையைச் சார்ந்தவர் என்று மதிப்பிடத்தக்க முறையில், அருந்தமிழ்த் தொண்டு ஆற்றி வருபவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள். எதிலும் தமிழ் எங்கும் தமிழ் என்ற கொள்கையில் உறுதி பூண்டு, தமிழ் எல்லா வகையிலும் மேம்பாடு எய்தவும், தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் சிறப்பு அடையவும், தமிழ் நாடு எல்லா நெறிமுறைகளிலும் முன்னோடியாக விளங்கவும் வேண்டும் என்பதற்காக, அடிகளார் அவர்கள், தமது நேரம், நினைப்பு , உழைப்பு, ஊக்கம், அறிவு, ஆற்றல், முனைப்பு, முயற்சி ஆகிய எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சிறந்த சிந்தனையாளர்; நல்ல தமிழ்ச் சொற்பொழிவாளர் அழகு தமிழ் எழுத்தாளர்; பொதுத் தொண்டு புரியும் பெற்றியாளர்; பழகுவதற்கேற்ற பண்பாளர். என்று இரா. நெடுஞ்செழியன் மேனாள் கல்வி, சுற்றுலா அமைச்சர். அடிகளாரைப் பாராட்டி பெருமை பெற்றுள்ளார்கள்.


தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆழ்ந்த சிந்தனை யாளர். அடிகளார் சமயத் துறையின் தலைமை மாளிகை களில் புதிய சாளரங்களைத் திறந்தவர். வெயிலும், ஒளியும், புயலும், காற்றும் சமுதாயச் சூழலில் மட்டுமன்று; சமயச் சூழலிலும் இயல்பானவையே; ஏற்கத் தக்கவையே என்ற மனம் கொண்டவர். அறிவுலகத்தின் ஆய்விற்கும், வளரும் சமுதாயத்தின் மாற்றங்கட்கும், சமயங்கள் புறம்பானவையல்ல. இவற்றின் தாக்கங்கட்கு ஈடு கொடுத்து, சமய மரபுகள் நிற்க வேண்டுமே யன்றி, இவற்றினின்றும் பாதுகாக்கப்பட வேண்டுவன அல்ல எனும் துணிந்த உள்ளத்தினர். எனவே பகுத்தறிவு மேடையோ பொது உடமை வாதமோ, அவர் புறக்கணிக்கும் ஒன்றாக இருந்ததில்லை. புதிய விஞ்ஞான உலகிலும், புதிய அரசியல் கோட் பாட்டுச் சூழலிலும் புரட்சிகரமான சமுதாயத் தத்துவங் களிடையேயும், நம்பிக்கையோடும் நட்போடும், அடிப்படைச் சமய நடைமுறைகட்கு ஞாயம் கற்பித்து, உயர்ந்து நிற்பவர். புரட்சிகரமான கருத்துக்கள் தமிழர்தம் சமய உலகிற்குப் புறம்பானவையல்ல ; அனைத்து அதிகாரமும் அரசன் கையில் இருந்த காலத்தில் 'நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்' என்று பாடிய அப்பரும், மண்ணிற் பிறப்பதே பாவங்களின் விளைவு என்ற மனப்பான்மை பரவி நின்ற சூழலில் 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த வையகத்தே என்று பாடிய திருநாவுக்கரசரும், 'கண்மூடிப் பழக்கமெலாம் மண் மூடிப் போக' என்று குரலெழுப்பிய இராமலிங்கரும் புரட்சியாளர் களேயாவர். எனவே அடிகளார் தம் புதுமை உணர்வுகள், வழி வழி வரும் தமிழ்ச் சமய உலக மரபின் தொடர்ச்சியேயாகும் என்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி, மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் அடிகளாரைப் பாராட்டி பெருமை எய்தியுள்ளார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,226. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.