Show all

கவின் பிரபலம் காரணமோ! கிழித்துத் தொங்கவிடப்படும் கவின் குடும்பத்தார்.

தற்போது, பிக்பாஸ் பருவம் மூன்றில் காதல்மன்னனாக போட்டியாளர் நடிகர் கவின் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் மீது பனிரெண்டு ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், அவர்கள் குற்றவாளிகள் என ஐந்து ஆண்டு சிறை என்கிற செய்தி தலைப்பாகி வருகிறது.

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தற்போது, பிக்பாஸ் பருவம் மூன்றில் காதல்மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும், போட்டியாளர் நடிகர் கவின் குடும்பத்தினருக்கு மோசடி வழக்கில் ஐந்து ஆண்டு சிறை!

நடிகர் கவின் ராஜ் குடும்பத்தினர் சீட்டு மோசடி வழக்கில், குற்றவாளிகள் எனத் திருச்சி மாவட்ட தலைமை அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதுபோன்ற வழக்குகள் தீர்ப்புகள் நாளும் நடந்து கொண்டிருப்பதுதான். ஆனால் ஊடகங்களால், கூடுதல் பார்வைபெற்று, கிழித்துத் தொங்கவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் கவின் குடும்பத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் காதல் மன்னனாக கலக்கிவரும் காரணத்தின் கோபம் பற்றியோ?

நடுத்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு வங்கிகள் ஏதும் கடன் தராது என்கிற நிலையில், சீட்டு நிறுவனங்கள் பெரிய வரமாக இருக்கின்றன. சீட்டு நிறுவனங்கள் சிக்கலில் மாட்டும் போது கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்ற போதும் கூட, இந்தத் தேவைக்கான தளமாக இருப்பவை: பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்களும், தனிநபர் அல்லது சில குடும்பங்கள் நடத்தும் சீட்டு நிறுவனங்களுமே என்பது உண்மை நிகழ்வாகும்.

சீட்டு நிறுவனங்களில் பதிவு செய்தவை ஐந்து விழுக்காடும், தனிநபர் அல்லது குடும்பங்கள் நடத்தும் நிறுவனங்கள் இரண்டு அல்லது மூன்று விழுக்காடும் கழிவு எடுத்துக் கொள்கின்றன. இரு வகை நிறுவனங்களும் தள்ளுபடி இல்லாத முகவர் சீட்டு எடுத்துக் கொள்கின்றன.

இரண்டு நிறுவனங்களுமே வாத்தை அறுத்து பொன்முட்டை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அதில் கிடைக்கும் வருமானம் என்பது தொடர்ந்து கிடைக்கும் பொன்முட்டை என்பதை இருவரும் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். 

அப்புறம் எங்கே மோசடி வருகிறது? ஒரு இலட்ச ரூபாய் சீட்டு என்றால்: சேமிப்பு அல்லது கடன் என்ற வகைக்காக இருபது அல்லது நாற்பது உறுப்பினர்கள் சேர்க்கப் படுவார்கள். தொடக்கத்தில் சீட்டு எடுப்பவர்களுக்கு: குறைந்த வட்டியில், குறைந்த காலத்தில் அசலும் அடைக்கப் பட்டு விடுகிற கடனாகவும், இறுதியில் சீட்டு எடுப்பவர்களுக்கு: நிறைவான வட்டி தருகிற சேமிப்பாகவும் அமைவதுதான் சீட்டு.

சீட்டில் சேருபவர்கள் யாரும் விருப்பம் இல்லாமல் நிர்பந்தத்தின் பேரில் சேருவது இல்லை. சமூக காரணங்களால் தொடக்கத்தில் சீட்டு எடுத்தவர் நசிந்து போனால், அல்லது தகுதிக்கு மீறிய கடன் பெறும் வகையில் சீட்டில் இணைந்திருந்தால் அவரால் சீட்டுக்கு தவணை செலுத்த முடியாமல் போகிற நிலையில்தான் சிக்கல் எழுகிறது.

சீட்டு எடுக்காத மீதி பேர்கள் சீட்டு நிறுவனத்தை நெருக்கத் தொடங்கி விடுவார்கள். அப்போது தான்: வாதம், வம்பு, வழக்கு மோசடி என்று அவர்கள் இந்தத் தொழிலில் இறங்கியதிலிருந்து ஈட்டிய அனைத்து வருமானத்தையும் இழப்பதோடு, முன்னோர் விட்டுச் சென்ற சொத்துக்களையும் இழக்க வேண்டியதாகி, வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். 

நடிகர் கவின்ராஜ் குடும்பத்தினர் மீது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு 29 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத் தலைமை குற்றவியல் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

மேற்படி வழக்கு விசாரணையில், கடந்த கிழமை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் 31 பேர் கவின்குடும்பத்தினருக்கு எதிராக சாட்சியம் சொன்னார்கள். இதுதொடர்பான குறுக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்கள் முடிந்தநிலையில், நேற்று திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் அறங்கூற்றுமன்ற நடுவர் கிருபாகரன் மதுரம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

கவின் குடும்பத்தினருக்கு எதிராக 31 சாட்சிகள் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக அறங்கூற்றுவர் அறிவித்தார். 

சாட்சி அளித்த 31 பேர்களுக்கும், கவின் குடும்பத்தார், தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை வழக்கு நடந்த 12 ஆண்டு காலத்திற்கும் 5 விழுக்காடு வட்டி கணக்கிட்டு மொத்தம் ரூ.55.10 லட்சத்தை அறங்கூற்றுமன்றத்தில் செலுத்த வேண்டும். கட்டத் தவறினால் குற்றவாளிகளின் சொத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,260.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.