Show all

சும்மா அதிருதில்ல! ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த சுப்பிரமணியன் சாமி

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் ஹிந்தியில் கேள்வி எழுப்ப, ஆட்சேபம் தெரித்த சுப்பிரமணியன் சுவாமி, “நான் தமிழன், ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று பதிலளித்தார்.

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முன்னாள் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு இதழ் நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். 

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் தவறாக கணக்கு காட்டப் பட்டிருப்பதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டெல்லி கூடுதல் மாநகர அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் இன்று சுப்பிரமணியன் சாமியை, சோனியா மற்றும் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா குறுக்கு விசாரணை செய்தார். அறங்கூற்றுவர் சமர் விசால் முன்னிலையில், வழக்கு தொடர்பாக பல கேள்விகளை சீமா, சுப்பிரமணியன் சாமியிடம் எழுப்பினார்.

வழக்கு விசாரணையின் போது சீமா, ஹிந்தியில் பேசினார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சாமி, “ஆங்கிலத்தில் பேசுங்கள்; அறங்கூற்றுமன்றத்தின் மொழி ஆங்கிலமே” என்று கூறினார். உடனே குறுக்கிட்ட அறங்கூற்றுவர் விசால், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்றத்தின் மொழிதான்; என்று தெரிவித்ததோடு, ஹிந்தி தேசிய மொழி என்ற தவறான தகவலையும் தெரிவித்தாக தெரிகிறது.

(ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டுமே என்று குஜராத் அறங்கூற்றுமன்றம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இந்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஒரு பதிலில், இந்தியாவுக்கென தேசிய மொழியென்று எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.)

இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் சுப்பிரமணியன் சாமியிடம் சீமா ஹிந்தியில் கேள்வி எழுப்பினார். மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுவாமி, “தயது செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்; நான் தமிழன்” என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,260.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.