Show all

மாவட்ட ஆட்சியர் பதவி விலகல்! ஒரு ஆளுமைப் பணியில் தனது குரலுக்கு மதிப்பேயில்லை என்று காரணம் தெரிவிக்கிறார்

ஒரு ஆளுமைப் பணியில் தனது குரலுக்கு மதிப்பேயில்லை என்கிற காரணத்தினால்: இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கண்ணன் கோபிநாதன் கடந்த கிழமை தன் பதவியை விட்டு விலகியுள்ளார். 

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கண்ணன் கோபிநாதன் கடந்த கிழமை தன் பதவியை விட்டு விலகியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்; அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நம்மில் பலரும் வேலைக்கு வருகிறோம். அப்படியிருக்கும்போது, என்னுடைய குரல் அங்கே எடுபடவில்லை, என்னுடைய குரலுக்கான முதன்மைத்துவம் இல்லை என்றபோது பதவி விலக முடிவு செய்தேன் எனக் கூறியிருந்தார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உதவிகள் குவிந்தன. அந்த நேரத்தில், தான் ஒரு ஆட்சிப்பணித்துறை அதிகாரி என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் கண்ணன் கோபிநாதன்.

இந்நிலையில், கண்ணன் கோபிநாதனின் விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அவர் பணிக்கு வரவேண்டும் என இந்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஹவேலி தலைநகர் சில்வாசாவில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார் கோபிநாதன். பதவி விலகல் முடிவுக்குப் பிறகு அவர் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மீண்டும் பணியில் சேர வேண்டும் என்ற கடிதம் அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்பு கதவில் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அதில், உங்கள் விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை உங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என இந்தக் கடிதம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து அவரிடம் கேட்ட போது, அப்படியெல்லாம் நிர்பந்திக்க முடியாது. எந்த உரிமையும் இல்லாத ஆளுமைப் பணியில் தொடர முடியாது என்று தெரிவிக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,259.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.