Show all

சவப்பெட்டியை வைத்து அநாகரீக கருத்துப்பரப்புதல்: கடும் எதிர்ப்பால் கைவிட்டது பன்னீர் அணி

தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இராதாகிருட்டினன் நகரில் பன்னீர் அணியினர் மேற்கொண்ட சவப்பெட்டி கருத்துப்பரப்புதல் நிறுத்தப்பட்டது.

     செயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை கருத்துப்பரப்புதல் வண்டியில் வைத்துக்கொண்டு வாக்கு கேட்டது பன்னீர் அணி. இதற்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து சவப்பெட்டி கருத்துப்பரப்புதல் நிறுத்தப்பட்டது.

     செயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று கருத்துப்பரப்புதல செய்து வருகிறது பன்னீர் அணி. அதன் ஒரு கட்டமாக, செயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை கருத்துப்பரப்புதல் வண்டியின் முன்னால் வைத்துக்கொண்டு தெரு, தெருவாக போய் வாக்கு கேட்டது பன்னீர் அணி.

     முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நடத்திய கருத்துப்பரப்புதல் ஊர்வலத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்டிமென்டாக இராதாகிருட்டினன்நகர் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வளவு கீழ் மட்டத்திற்கு அரசியல் நாகரீகத்தை பன்னீர் அணி கொண்டு சென்றுள்ளது நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

     இந்நிலையில் சவப்பெட்டி மீது தேசிய கொடி போர்த்தப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த நூதன கருத்துப்பரப்புதலுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சவப்பெட்டி கருத்துப்பரப்புதலை பன்னீர் அணியினர் நிறுத்தினர். தற்போது செயலலிதா உருவபொம்மை உள்ள சவப்பெட்டி இராதாகிருட்டினன்நகரில் உள்ள ஓபிஎஸ் அணி பணிமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.