Show all

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு தொடர்பு- உச்சநீதிமன்றத்தில் சிபிஐ

பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டத்தில் அத்வானி உட்பட 13 பாஜக தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது; மீண்டும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

     அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததில் அத்வானி 13 பாஜக மூத்த தலைவர்களுக்கு சதித் திட்டத்தில் தொடர்பு உள்ளது என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை லக்னோ நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் எனவும் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

     உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் 1992-ம் ஆண்டு பாபர் மசூதியை இந்துத்துவா வெறியர்கள் இடித்து தரைமட்டமாக்கினர். இதையடுத்து நாடு முழுவதும் வரலாறு காணாத மதமோதல்கள் வெடித்தன. இதில் 3,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

     இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நடுவண் அமைச்சர் உமாபாரதி, ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

     இவ்வழக்கை விசாரித்த ரேபரேலி சிறப்பு நீதிமன்றம், அத்வானி, ஜோஷி உட்பட 13 பேரை விடுவித்தது. ரேபரேலி நீதிமன்றத்தின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றமும் 2010-ல் உறுதி செய்தது.

     ஆனால் ரேபரேலி மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை கடந்த மாதம் 6-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோரை விடுவித்ததை ஏற்க முடியாது; அத்வானி உட்பட 13 பேருக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் என அதிரடியாக கூறியிருந்தது.

     இதனிடையே இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இம்மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அத்வானி உட்பட 13 பாஜக தலைவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பு குற்றச்சதியில் தொடர்பு உள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். லக்னோ நீதிமன்றத்தில் 13 பேருக்கு எதிரான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

     சாத்தியமா? சாத்தியப்படுத்தப் படுமா? அல்லது உள்கட்சி அரசியலா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.