Show all

இன்று இராசஇராசசோழன் போர்மீன் பிறந்த நாள் விழா

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராசராசசோழனின் 1032 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்கியது.

ராசராசசோழன் தமிழ்தொடர்ஆண்டு-4087ல் ஐப்பசி மாத போர்மீனில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராசராசசோழனின் பிறந்தநாள் ஐப்பசி மாதம் போர்மீனில் (போர்மீன், நீர்நாள்மீன், செக்குமீன், குன்றுமீன், சுண்டன்மீன், ஆரியர் வரவுக்குப்பின் இது சதய நட்சத்திரமாகி விட்டது.) தமிழகம் முழுவதும் அரசு சார்பாகவும், தமிழ்நாடு அறநிலையத் துறை சார்பாகவும், பொது மக்களோடு இணைந்து கொண்டாடப் பட்டு வருகிறது.

இந்த விழாவைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பேசியது:

மாமன்னன் ராசராசசோழன் தான் வாழ்ந்த பிறகும் அவர் கட்டிய பெருவுடையார்கோயில் சிற்பக் கலையுடன் இன்றும் பழைமை மாறாமல் காட்சியளிக்கிறது. இதன் மூலம் அவர், தான் வாழ்ந்த மண்ணுக்குப் பெருமை தேடி தந்துள்ளார்.

ஐ.நா.அவையைச் சார்ந்த யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கோயில்களில் தஞ்சாவூர் பெரிய கோயிலும் ஒன்று. பன்னாட்டு அமைப்பே இக்கோயிலை அங்கீகரித்துள்ளது.

இக்கோயில் ஒரு புவியீர்ப்பு மையமாகவும் உள்ளது. இந்த ஊருக்கு வரும் பெரிய தலைவர்கள், உயர் அலுவலர்கள் என யார் வந்தாலும் அவர்களுடைய மனதில் இக்கோயிலை பார்க்கத் தூண்டும். கோயிலை பார்த்த பிறகு அவர்களுடைய மனதில் உற்சாகம் ஏற்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூகோளவியல் ரீதியான அறிவுடன் இக்கோயிலை அமைத்திருக்கிறான் ராசராசசோழன்;. மேலும், கடல் கடந்து ஆண்ட பெருமை ராசராசசோழனையே சாரும்.

இக்கோயிலில் ஒவ்வொரு இடத்திலும் அறிவியல் மற்றும் ஆன்மிகத் தன்மை இருக்கிறது. இக்கோயிலை எத்தனை முறைப் பார்த்தாலும், மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டும்.

ராசராசசோழனை உலகமே ஜாதி, மதம், இனம் கடந்து பாராட்டும். உலகமே வியந்து அவருடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் காலம் விரைவில் வரும் என்றார் ஆட்சியர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூரில் ராசராசசோழனின் 1032-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பிகள் உதவியாலும், பொல்லாப் பிள்ளையார் அருளாலும் திருமுறைகளை ராசராசசோழன் கண்டெடுத்தார் என்பது வரலாறு.

இதனால் ராசராசசோழனுக்கு திருமுறை கண்ட சோழன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது தமிழுலகம்.

அப்படி திருமுறை கண்ட சோழனுக்கு தஞ்சையில் பெரியகோயிலை கட்டியபோது கோயில் உள்ளே திருஉருவச் சிலை அமையவில்லை. அங்கு கோயில் முகப்பில் நந்தவனத்தில்தான் அவருக்கு சிலை நிறுவப்பட்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

ஆனால், திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் கோயிலில் நம்பியாண்டார் நம்பிகளின் அருகில் ராசராசசோழனுக்கு திருவுருவச் சிலை நிறுவி, பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான பிறந்தநாள் விழாவையொட்டி, இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.