Show all

இரஜினியைச் சுற்றி வலம் வரும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது! தமிழகம் சாதிக்க வேண்டிய இரண்டோ 1.நீட் வேண்டாம் 2.தமிழில் குடமுழுக்கு


குடமுழுக்கு பூசைகளை தமிழில் நடத்து எனக் கெஞ்சுவது கேவலம் என்று கவிஞர் தாமரை சாடியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்று நமக்கு நினைவூட்ட, மூன்று மாதங்களுக்கு முன்பே ஐ.நாவில் முழங்கியுள்ளார் ஒரு தமிழ்மாணவி! இவையிரண்டும் தமிழகம் முன்னெடுக்க வேண்டிய முதன்மைத் தேவைகள். ஆனால் இன்றைக்கு ஒட்டு மொத்த தமிழகமும் தேவையேயில்லாமல் இரஜினியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகப் புகழ்பெற்ற பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா இன்னும் இரண்டு கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், பெரியகோயில் குடமுழுக்கு பூசைகளை தமிழில் நடத்தக் கோரி  சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அறநிலையத்துறை தரப்பில், பெரியகோயிலில் ஆகம விதியைப் பின்பற்றியே குடமுழுக்கு நடத்தப்படும் என அறங்கூற்றுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தஞ்சாவூர் பெரியகோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை திங்கட் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு பூசைகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்று கவிஞர் தாமரை கோரிக்கை விடுத்துள்ளார். முகநூலில் அவர் கூறியதாவது:- 
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்று, தமிழரின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்று, பெருமைமிகு சுற்றுலாத்தலம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், தமிழ்த்தொடராண்டு 5121ல் (2020) நின்று கொண்டு ‘தமிழில் குடமுழுக்கு நடத்து’ என்று கெஞ்சிக் கொண்டிருப்பதே கேவலம். 
தஞ்சைக் கோயில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் வழிபாடு, குடமுழுக்கு நடைபெறுவது இயல்பாக்கப்படவேண்டும்.
இவையெல்லாம் போராடிப் பெற வேண்டியவை அல்ல, இயல்பாக உரிமையாக வர வேண்டியவை.

தமிழக அரசே, போராட்டத்திற்கு இடம் தராமல், நீங்களே முன்வந்து தமிழில்தான் நடத்தப்படும் என அறிவித்து எங்கள் காதுகளில் தேன் பாய்ச்சுங்கள். 

பின்குறிப்பு: ‘தமிழில் நடத்த நாங்கள்தான் ஆணையிட்டோம்’ என்று அரசியல் செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு! எதற்கு அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிக்குக் கொடுக்க வேண்டும்? தேர்தல் வருகிறதல்லவா என்று எழுதியுள்ளார்.

அடுத்து, நடப்பில் தமிழகம் பெரிதும் எதிர் நோக்கியுள்ள சிக்கல் நீட். நீட் தேர்வு வேண்டாம் என்று நமக்கு நினைவூட்ட, மூன்று மாதங்களுக்கு முன்பே ஐ.நாவில் முழங்கியுள்ளார் ஒரு தமிழ்மாணவி!

மதுரை மாவட்டம் இளமனூர் அடுத்த கார்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இளமனூர் அரசு ஆதிதிராவிட பள்ளியில் படித்த பிரேமலதா, மனித உரிமை குறித்த ஆவணப் படம் ஒன்றில் பேசியுள்ளார். அதனால் அவருக்கு ஐ.நா.வில் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதையடுத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் மாநாட்டில் பேசிய அவர், ‘தமிழகத்தில் உள்ள சாதிய ஒடுக்குமுறை, நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள், அனிதாவின் மரணம் உள்ளிட்ட விவகாரங்களை எடுத்துரைத்துள்ளார்.

பிரேமலதா தனது பேச்சில், மனித உரிமைக் கல்வியை அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தமிழக அரசு பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

நாம் நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், பெரியார் அவர்கள், வடஇந்தியர்களின் இராம் லீலாவைக் கண்டித்து, சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்தினார். இந்தப் பேரணிக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு சங் பரிவார் அமைப்பினருக்கு சேலம் காவல்துறை அனுமதி வழங்கியது. பேரணி நடக்கும்போது, காவல்துறை அனுமதித்த இடத்தை விட்டு வேறொரு இடத்தில் சங் பரிவார் அமைப்பினர் மறைந்திருந்து பெரியார் மீது செருப்பை வீசியுள்ளனர். அது குறிதவறி இராமர், சீதா உருவ பொம்மைகள் கொண்டுவரப்பட்ட வாகனத்தில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இயக்க உறுப்பினர் ஒருவர் அந்த செருப்பை எடுத்து உங்கள் செருப்பாலேயே உங்கள் மூடநம்பிக்கை இராமரை அடிக்கிறேன் என்று அடித்து இருக்கிறார்.

சங்பரிவார்- இதை திரித்து இன்றைக்கு இரஜினி குற்றச்சாட்டு வைப்பது போன்ற பொய்ச்செய்தியை வடிவமைத்து,  பார்ப்பனிய ஆதரவு இதழ்களுக்கு தகவல் தர அதை செய்தியாகப் போட்டு துக்ளக்கும், ஹிந்து இதழும் அறங்கூற்று மன்றத்தில் பொய்ச் செய்திக்கு மன்னிப்பு கேட்ட கதையின் முன்பாதியை மட்டும் தெரிந்து கொண்ட இரஜினிகாந்த் அதை இன்றைக்கு தெரிவித்து, அன்றைக்கு நடந்த பிற்பகுதியான மன்னிப்பு வேண்டல் நிலையை எதிர் நோக்கியுள்ளார். இப்படி இன்றைக்கு ஒட்டு மொத்த தமிழகமும் தேவையேயில்லாமல் இரஜினியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.