Show all

இனி மணல் தமிழகத்தில் தாராளமாகக் கிடைக்கும்

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தின் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு மாதமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 54 ஆயிரம் டன் மலேசிய மணல், ஓரிரு நாளில் விற்பனைக்கு வரவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் மணல் இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேவைக்கு ஏற்ற அளவு மணல் கிடைக்காததால் தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் முடங்கின.

இதற்குத் தீர்வு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த மாதம் 54,433 டன் மணலை இறக்குமதி செய்தது.

வெளிச்சந்தை விலையை விட 3 மடங்கு குறைவான விலைக்கு இறக்குமதி மணல் கிடைக்கும் என்றும், கட்டுமானப் பணிக்கு உகந்ததாக இருக்கும் என கட்டுமானத் துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. தமிழகத்தில் அரசு தான் மணல் விற்பனையை செய்யும். மேலும், மணலை சேமித்து வைக்கவும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும், வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். இத்தகைய அனுமதி எதுவும் பெறாததால் மலேசியா மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

மணலை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கக் கோரி, மணலை இறக்குமதி செய்த ராமையா என்பவர் உயர் அறங்கூற்று மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மலேசிய மணலை விற்பனை செய்யவும், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் அனுமதித்து, உயர் அறங்கூற்று மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் மலேசிய மணல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மணலில் பெரும்பகுதியை கேரளாவுக்கு கொண்டு செல்லவே இறக்குமதியாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தடுத்து, முழுவதையும் தமிழகத்திலேயே விற்பனை செய்ய வேண்டும் என கட்டுமானத் துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,622

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.